நீலிவனேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா
நீலிவனேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா நடந்தது.
சமயபுரம்:
தேர்த்திருவிழா
மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற விசாலாட்சி அம்பாள் உடனுறை நீலிவனேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் சுவாமி-அம்பாள் கேடயத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். அதைத்தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ரிஷப வாகனம் வரையப்பட்ட கொடிைய மேளதாளங்கள் முழங்க கொடிமரத்தில் கோவில் குருக்கள் ஏற்றினார். இதைத்தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. இதில் அனைத்து கிராம பட்டையதாரர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் கேடயத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
திருக்கல்யாணம்
இதைத்தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) முதல் காலையில் பல்லக்கிலும், இரவில் ஒவ்வொரு நாளும் முறையே சிம்ம வாகனம், கிளி வாகனம், யாளி வாகனம், அன்ன வாகனம், பூத வாகனம் ஆகியவற்றிலும் சுவாமி எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். 9-ந்தேதி (திங்கட்கிழமை) இரவு 7 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறுகிறது.
10-ந் தேதி காலை 11.30 மணிக்கு மேல் 12.30 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இரவில் யானை வாகனம் மற்றும் கிளி வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அடுத்தடுத்த நாட்களில் கைலாச வாகனம், அன்ன வாகனம், தங்கக்குதிரை வாகனம், காமதேனு வாகனத்தில் சுவாமி எழுந்தருளுகிறார்.
தேரோட்டம்
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 13-ந்தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் மேஷ லக்னத்தில் தேரில் சுவாமி எழுந்தருளுகிறார். தொடர்ந்து மதியம் 2 மணிக்கு மேல் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 14-ந்தேதி மாலை 6 மணிக்கு மேல் தேர்க்கால் பார்த்தல் மற்றும் நடராஜர் புறப்பாடு நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு கேடயத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.
15-ந் தேதி இரவு 7 மணிக்கு முத்துப்பல்லக்கும், 16-ந்தேதி இரவு பஞ்சப்பிரகார புறப்பாடும் நடைபெறுகிறது. 17-ந்தேதி காலை 7 மணிக்கு விடையாற்றி மற்றும் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை இணை ஆணையர் சீ.செல்வராஜ் உத்தரவின்படி கோவில் செயல் அலுவலர் முத்துராமன் மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர்.