சேலம் மாவட்டத்தில் 154 மையங்களில் பிளஸ்-2 தேர்வு: 35,799 மாணவ-மாணவிகள் எழுதினர்-கலெக்டர் கார்மேகம் ஆய்வு
சேலம் மாவட்டத்தில் 154 மையங்களில் நடந்த பிளஸ்-2 பொதுத்தேர்வை 35 ஆயிரத்து 799 மாணவ, மாணவிகள் எழுதினர். மேலும் உடையாப்பட்டி பள்ளியில் கலெக்டர் கார்மேகம் நேரில் ஆய்வு செய்தார்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் 154 மையங்களில் நடந்த பிளஸ்-2 பொதுத்தேர்வை 35 ஆயிரத்து 799 மாணவ, மாணவிகள் எழுதினர். மேலும் உடையாப்பட்டி பள்ளியில் கலெக்டர் கார்மேகம் நேரில் ஆய்வு செய்தார்.
பிளஸ்-2 தேர்வு
தமிழகத்தில் நேற்று பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது. வருகிற 28-ந் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகிறது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் மற்றும் தனித்தேர்வர்கள் என மொத்தம் 39 ஆயிரத்து 255 பேர் இத்தேர்வை எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 18 ஆயிரத்து 394 மாவட்டம் முழுவதும் 154 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
காலை 9 மணிக்கு பள்ளி மாணவ, மாணவிகள் அவரவர் தேர்வு மையங்களில் இருக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவுரை வழங்கப்பட்டிருந்தது. இதனால் பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் காலையில் தங்களது பள்ளிக்கு வந்தனர். முன்னதாக சிலர் ராஜகணபதி கோவில், கோட்டை மாரியம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்திவிட்டு தேர்வு எழுத சென்றதை காணமுடிந்தது.
அறிவுரை
தேர்வு அறைக்கு மாணவ, மாணவிகள் செல்வதற்கு முன்பாக அவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள், தேர்வை பதற்றமின்றி எதிர்கொள்வது குறித்தும், தன்னம்பிக்கையுடன் தேர்வை எழுதுவது தொடர்பாகவும் அறிவுரை வழங்கினர். சேலம் கோட்டை, குகை மூங்கப்பாடி மகளிர் மேல்நிலைப்பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளிலும் கொரோனா கட்டுப்பாடுகளையும் மாணவ-மாணவிகள் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து அனைத்து மையங்களிலும் நேற்று காலை 10 மணிக்கு பிளஸ்-2 தேர்வு தொடங்கியது. முதல் 15 நிமிடங்கள் கேள்விகளை படித்து பார்க்கவும், விடைத்தாள் முகப்பில் குறிப்புகள் எழுதவும் ஒதுக்கப்பட்டது. அதன்பிறகு தேர்வுகள் 10.15 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடிந்தது. மாவட்டத்தில் 35 ஆயிரத்து 799 மாணவ, மாணவிகள் நேற்று தமிழ் முதல்தாள் தேர்வை எழுதியதாகவும், 1,951 பேர் தேர்வு எழுத வரவில்லை என்றும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கலெக்டர் ஆய்வு
சேலம் அருகே உடையாப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த பிளஸ்-2 பொதுத்தேர்வை மாவட்ட கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அவர் தேர்வு மையத்தில் எத்தனை மாணவர்கள் உள்ளனர்? அவர்களுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதா? என்றும், பொதுத்தேர்வில் எவ்வித முறைகேடு இல்லாமல் நேர்மையாக நடத்த வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தினார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் உடனிருந்தார்.
பிளஸ்-2 தேர்வை அவ்வப்போது கண்காணிக்கும் வகையில் 164 முதன்மை கண்காணிப்பாளர்கள், 164 துறை அலுவலர்கள், 2 ஆயிரத்து 150 அறை கண்காணிப்பாளர்கள், 372 ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் உள்பட கல்வித்துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து தேர்வு மையங்களை பார்வையிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.