விபத்தில் சிக்கிய காரில் ரூ.1¾ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்-டிரைவர் கைது
விபத்தில் சிக்கிய காரில் ரூ.1¾ லட்சம் புகையிலை பொருட்கள் கடத்தப்பட்டது. இதையடுத்து குட்காவை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்தனர்.
ஓமலூர்:
ஓமலூர் அருகே தீவட்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் சேலம் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தீவட்டிப்பட்டி அடுத்த ஜோடுகுளி பஸ் ஸ்டாப் அருகே கார் ஒன்று ரோட்டில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளாகி நின்று இருந்தது. இதைப்பார்த்த போலீசார் விரைந்து சென்று அந்த காரில் சோதனை நடத்தினர். அப்போது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. அதாவது 16 மூட்டைகளில் ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் மதிப்புள்ள பான்பராக், குட்கா, ஹான்ஸ் உள்பட பல்வேறு புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து காருடன் அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கார் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு எம்.ஜி. ரோடு பகுதியை சேர்ந்த சங்கர் என்கிற சித்தராராம் (வயது 26) என்பது தெரியவந்தது. இதையடுத்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தனர்.