நெல் கொள்முதல் செய்ய தாமதம்:தலைவாசலில் விவசாயிகள் சாலை மறியல்
நெல் கொள்முதல் செய்ய காலதாமதம் செய்வதாக கூறி தலைவாசலில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;
தலைவாசல்:
நெல் கொள்முதல் செய்ய காலதாமதம் செய்வதாக கூறி தலைவாசலில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நெல் கொள்முதல் நிலையம்
தலைவாசல் காய்கறி மார்க்கெட் அருகில் தலைவாசல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கி வளாகத்தில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தலைவாசல் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்தில் விளைந்த நெல்லை கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள்.
இந்த நிலையில் விவசாயிகள் பதிவு செய்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்துவதும், மேலும் நெல் கொள்முதல் நிலையம் மூடும் நிலையில் உள்ளதாகவும் தகவல் வெளியானது. மேலும் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்காததால், மழையில் நனைந்து வீணானது.
சாலை மறியல்
இதையறிந்த விவசாயிகள் நேற்று அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் ஸ்ரீராம் தலைமையில் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தலைவாசல் போலீஸ் நிலையம் எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதால், விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டனர்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
இது குறித்து சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கூறியதாவது:-
நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைக்கப்படவில்லை. இதனால் நேற்று (நேற்றுமுன்தினம்) பெய்த மழையினால் நெல்மூட்டைகள் நனைந்து வீணாகி விட்டது. நாங்கள் கொண்டு வந்த நெல்லை உடனே அரைக்காததால், அவை மழையில் நனைந்து முளைக்க தொடங்கி விட்டது. இதனால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். விவசாயிகள் பதிவு செய்துள்ள நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து தலைவாசல் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.