ரூ.6 கோடி கடன் தருவதாக கூறி ரூ.12½ லட்சம் மோசடி-நிதி நிறுவன அதிபர் மீது வழக்கு
ரூ.6 கோடி கடன் தருவதாக கூறி ரூ.12½ லட்சம் மோசடி செய்ததாக நிதி நிறுவன அதிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;
கன்னங்குறிச்சி:
திருச்சி மாவட்டம் சோபன்னபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர் கன்னங்குறிச்சியை சேர்ந்த நிதிநிறுவன அதிபர் திருநாவுக்கரசுவிடம் ரூ.1 கோடி கடன் கேட்டதாகவும் அதற்காக பல்வேறு ஆவணங்கள் மற்றும் ஆவண பதிவு உள்ளிட்ட செலவுக்காக ரூ.6.89 லட்சம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் திருநாவுக்கரசு, கண்ணனுக்கு பணமும் தராமல் ஆவணங்களையும் திரும்ப கொடுக்காமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது. இதனால் கண்ணன் இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் திருநாவுக்கரசு, சிவா சரவணன் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் கெங்கவல்லி நாகியம்பட்டியை சேர்ந்த கோழித்தீவன நிறுவன உரிமையாளர் செந்தில்குமாரிடம், தொழிலை விரிவுப்படுத்த ரூ.5 கோடி கடன் தருவதாக கூறி கன்னங்குறிச்சி திருநாவுக்கரசு கூறியதாக தெரிகிறது. அதன்பேரில் ஆவண செலவுக்காக செந்தில்குமாரிடம் ரூ.5¾ லட்சத்தை பெற்றுக்கொண்ட திருநாவுக்கரசு கடன் வாங்கி தராமலும், பணத்தை திரும்ப கொடுக்காமலும் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில், திருநாவுக்கரசு மீது மேலும் ஒரு மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.