‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-05-05 21:38 GMT
உயரமான தடுப்பு சுவர் 
ஈரோட்டில் இருந்து கரூர் செல்லும் ரோட்டில் மலையம்பாளையத்தில் காலிங்கராயன் வாய்க்காலின் குறுக்கே பாலம் உள்ளது. இந்த பாலத்தின் தடுப்பு சுவர் உயரம் குறைவாக இருக்கிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பஸ், லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்கள் இந்த வழியாக சென்று வருகின்றன. இந்த இடத்தில் ரோடு வளைவாக உள்ளது. கொஞ்சம் தடுமாறினாலும் வாய்க்காலுக்குள் வாகனங்கள் பாய்ந்துவிடும். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த வாய்க்கால் பாலத்தின் தடுப்பு சுவரை உயர்த்த வேண்டும்.
உதயமொழி, ஈரோடு. 

தடுமாறும் வாகனங்கள்
ஈரோட்டில் இருந்து கொல்லம்பாளையம் செல்லும் வழியில் காளைமாடு சிலை அருகே முக்கிய வழித்தடமான ரெயில்வே பாலம் வருகிறது. இந்த பாலத்தின் கீழ் உள்ள இரு பாதையிலும் நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் பாதை தரமாக இல்லை. ஆங்காங்கே விட்டு விட்டு பராமரிப்பு பணி செய்துள்ளார்கள். இதனால் ரோடு ஒரு இடத்தில் மேடாகவும், ஒரு இடத்தில் பள்ளமாகவும் உள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் தடுமாறுகிறார்கள். மாநகரின் முக்கிய வழித்தடம் இப்படி இருக்கலாமா?, அதிகாரிகள் கவனிப்பார்களா?
குறளின்பன், ஈரோடு.
 
தூர்வாரப்படுமா? 
அந்தியூர் அருகே உள்ள சங்கராபாளையத்தில் பல மாதங்களாக சாக்கடை தூர்வாரப்படாமல் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அதனால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட உள்ளாட்சி துறை அதிகாரிகள் சங்கராபாளையத்தில் சாக்கடையை தூர்வார நடவடிக்கை எடுப்பார்களா?
குப்புசாமி, சங்கராபாளையம்.

மேலும் செய்திகள்