விளாமுண்டி வனப்பகுதியில் நாய் கடித்து இறந்த புள்ளிமானின் இறைச்சியை விற்க சென்ற 3 பேர் கைது
விளாமுண்டி வனப்பகுதியில் நாய் கடித்து இறந்த புள்ளிமானின் இறைச்சியை விற்க சென்ற 3 பேர் கைது
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள விளாமுண்டி கிழக்கு வனப்பகுதியில் 108 குமரன் கோவில் அருகே வனவர் ஆறுமுகம் தலைமையில் வனத்துறையினர் ரோந்து சென்றார்கள்.
அப்போது 3 பேர் கையில் சாக்குப்ைபயுடன் சந்தேகப்படும் வகையில் வந்துகொண்டு இருந்தார்கள். உடனே வனத்துறையினர் 3 பேரையும் தடுத்து நிறுத்தி சாக்கு பையை சோதனை செய்தார்கள். அதில் மான் இறைச்சி இருந்தது. இதனால் 3 பேரிடமும் வனத்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.
வனத்துறையினரின் விசாரணையில் அவர்கள், புஞ்சைபுளியம்பட்டி அண்ணாநகரை சேர்ந்த பழனிசாமி (வயது 45), தொப்பம்பாளையத்தை சேர்ந்த நல்லதம்பி (39), வெள்ளாளபாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (45) ஆகியோர் என்பதும், காட்டுக்குள் நாய் கடித்து இறந்து கிடந்த புள்ளிமானின் இறைச்சியை 3 பேரும் சேர்ந்து வெட்டி, விற்பதற்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்த மான் இறைச்சியையும் பறிமுதல் செய்தார்கள்.