கல்வி நிறுவன தலைவர் கொலையில் கைதான 4 பேரும் விடுதலை
தகுந்த ஆதாரத்தை போலீசார் சமர்ப்பிக்காததால் கல்வி நிறுவன தலைவர் கொலை வழக்கில் கைதான 4 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
பெங்களூரு:தகுந்த ஆதாரத்தை போலீசார் சமர்ப்பிக்காததால் கல்வி நிறுவன தலைவர் கொலை வழக்கில் கைதான 4 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
கல்வி நிறுவன தலைவர் கொலை
பெங்களூரு மாகடி ரோடு பகுதியில் வசித்து வந்தவர் ரங்கநாத் நாயக். இவர் கல்வி நிறுவனம் ஒன்றின் தலைவராக இருந்தார். இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ந் தேதி ரங்கநாத்தை ஒரு கும்பல் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தது. இதுகுறித்து மாகடி ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அப்போது சொத்து தகராறில் ரங்கநாத் கொலை செய்யப்பட்டது தெரிந்தது. இந்த கொலை தொடர்பாக அக்ரஹாரா தாசரஹள்ளியை சேர்ந்த முனிராஜ் என்கிற பப்லி, மஞ்சுநாத் என்கிற டிக்கி மஞ்சா, பசவேஸ்வராநகரில் வசித்து வரும் மகேஷ் என்கிற அம்மு, சிக்ககொல்லரஹட்டியை சேர்ந்த கவுதம் என்கிற சித்தார்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
4 பேரும் விடுவிப்பு
இந்த வழக்கில் போலீஸ்காரர்கள், உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர், ரங்கநாத்தின் மனைவி பர்வதம்மா உள்பட 36 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு இருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது போலீஸ்காரர்கள், டாக்டர் தவிர மற்ற சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறின.
கைதான 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த போது அவர்களை பர்வதம்மா சரியாக அடையாளம் காட்டவில்லை. இந்த நிலையில் கைதான 4 பேரும் தங்களை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி பெங்களூரு 67-வது கூடுதல் சிட்டி சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி காசிம் சுரிகான் முன்னிலையில் நடந்து வந்தது. இந்த வழக்கு இறுதி விசாரணை நேற்று முன்தினம் நடந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான வக்கீல் 4 பேரையும் வழக்கில் இருந்து விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்தார்.
அப்போது குறுக்கீடு பேசிய நீதிபதி கைதான 4 பேரும் கொலை செய்தார்கள் என்ற உறுதியான ஆதாரத்தை போலீசார் கோர்ட்டில் சமர்ப்பிக்கவில்லை என்று கூறியதோடு, இந்த வழக்கில் போலீசார் அலட்சியமாக செயல்பட்டதாகவும் கூறினார். மேலும் 4 பேரையும் வழக்கில் இருந்து விடுவிப்பதாகவும் நீதிபதி உத்தரவிட்டார்.