கருப்பு பணத்தை மாற்றி தருமாறு கூறி மின்வாரிய ஊழியரிடம் ரூ.3 லட்சம் மோசடி
கருப்பு பணத்தை மாற்றி தருமாறு கூறி மின்வாரிய ஊழியரிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சிக்கமகளூரு: கருப்பு பணத்தை மாற்றி தருமாறு கூறி மின்வாரிய ஊழியரிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெஸ்காம் நிறுவனத்தில்...
சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா. தாலுகா பாலேெஹான்னூர் போலீஸ் நிலையத்தில் விஜயகுமார் என்பவர் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
நான் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாேகபள்ளியில் பெஸ்காம் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மநபர் ஒருவர் எனக்கு செல்போன் மூலம் அறிமுகம் ஆனார். இந்த நிலையில் அவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு என்னை தொடர்பு கொண்டு பெங்களூரு அருகே கல்லூர் மடத்தை சேர்ந்த மடாதிபதிகள் ரூ.350 கோடி பணம் வைத்துள்ளனர். அவர்கள் அந்த கருப்பு பணத்தை மாற்றி தருவதற்கு எங்களை நியமித்துள்ளனர்.
மாற்றி தரும் பணத்திற்கு கமிஷன் தருவார்கள் என கூறினார். அதை நான் உண்மை என நம்பி அவர்களிடம் பணத்தை மாற்றி தர ஒப்புகொண்டேன். இதையடுத்து அவர் ரூ.3 லட்சத்தை எடுத்து கொண்டு ஒரு இடத்திற்கு வருமாறு கூறினார். நானும் அந்த இடத்திற்கு ரூ.3 லட்சத்துடன் சென்றேன். அப்போது அந்த மர்மநபர் தன்னுடன் 2 பேரை அழைத்து வந்தார்.
காகித கழிவுகள்
பின்னர் அவர்கள் என்னிடம் ஒரு பெரிய பையை கொடுத்தனர். மேலும் அதில் ரூ.10 லட்சம் இருக்கிறது என்றும் ரூ.3 லட்சத்தை கொடுத்துவிட்டு இந்த பணத்தை கொண்டு செல்லுங்கள் என்றும் கூறினர். மீதமுள்ள ரூ.7 லட்சத்தை மாதம் ரூ.50,000 என்ற முறையில் கொடுங்கள் என சொன்னார்கள்.
நான் அவர்களிடம் ரூ.3 லட்சத்தை கொடுத்துவிட்டு அவர்கள் கொடுத்த பையை வாங்கி கொண்டு சிறிது தூரம் வந்தேன். அப்போது அந்த பையை திறந்து பார்த்தபோது அதில் வெறும் ரூ.1,800 மட்டும் இருந்தது. அதுபோக காகித கழிவுகள் இருந்தது. உடனே அவர்கள் இருந்து இடத்திற்கு சென்றேன். அப்போது அங்கு யாரும் இல்லை.
மீட்டு தர வேண்டும்
அந்த மர்மநபர்களை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அப்போது தான் மர்மநபர்கள் காகிதப்பையை கொடுத்துவிட்டு என்னிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து ரூ.3 லட்சத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டு இருந்தது.
விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் பாலேஹொன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பண மோசடியில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.