மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; குழந்தை உள்பட 3 பேர் பலி

தாவணகெரே அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் குழந்தை உள்பட 3 பேர் பலியானார்கள்.

Update: 2022-05-05 21:14 GMT
சிக்கமகளூரு: தாவணகெரே அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் குழந்தை உள்பட 3 பேர் பலியானார்கள். 

 மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்

சிவமொக்கா டவுன் திப்பு நகரை சேர்ந்தவர் முகமது சபியுல்லா(வயது 45). இவரது மனைவி அமீதா(43). இந்த தம்பதியின் மகள், தாவணகெரே டவுனை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டது. அதன்படி மகளுக்கு கவுசியாபானு(வயது 4) என்ற குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரமலான் பண்டிகைக்காக முகமது சபியுல்லா தனது பேத்தி கவுசியா பானுவை சிவமொக்காவில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார். 

இதையடுத்து ரமலான் பண்டிகை முடிந்து நேற்றுமுன்தினம் இரவு முகமது சபியுல்லா, அவரது மனைவி அமீதா  பேத்தி கவுசியபானுவை தாவணகெரே டவுனில் உள்ள மகள் வீட்டில் கொண்டுவிட மோட்டார் சைக்கிளில் சென்றனர். அதாவது முகமது சபியுல்லா மோட்டார் சைக்கிளை ஓட்டினார். பின்னால் பேத்தி கவுசியாபானுவை வைத்து கொண்டு அமீதா அமர்ந்து சென்றார்.

 சிவமொக்கா-தாவணகெரே தேசிய நெடுஞ்சாலை சிக்கனஹள்ளி என்னுமிடத்தில் சென்றபோது எதிர்பாராதவிதமாக இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. 

 குழந்தை உள்பட 3 பேரும் பலி

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து முகமது சபியுல்லா, அமீதா, கவுசியா பானு தூக்கி வீசப்பட்டனர். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் லாரி சக்கரம் அமீதா, குழந்தை கவுசியாபானு மீது ஏறி இறங்கியது. 
இதில் அமீதா, குழந்தை கவுசியா பானு உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும் படுகாயம் அடைந்த முகமது ஜபியுல்லாவை, அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக தாவணகெரே அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முகமது ஜபியுல்லாவும் இறந்துவிட்டார். 

 சோகம்

இதுகுறித்து தாவணகெரே தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த விபத்து  அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்