ஆட்டோ மீது மரம் விழுந்து பெண் உள்பட 2 பேர் பலி
நெல்லை அருகே சாலை விரிவாக்க பணியின்போது ஆட்டோ மீது மரம் விழுந்ததில் பெண் உள்பட 2 பேர் பலியானார்கள்.
சேரன்மாதேவி:
நெல்லையில் இருந்து பாபநாசம் செல்லும் ரோட்டில், சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. நெல்லை அருகே உள்ள பத்தமடை பகுதியில் சாலை விரிவாக்கத்துக்காக மரங்கள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று காலையில் பத்தமடை குளத்துக்கரை பகுதியில் அமைந்துள்ள மரங்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது.
அப்போது, பத்தமடை பள்ளிவாசல் 5-வது வடக்கு தெருவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் காதர் மைதீன் (வயது 35), தனது மனைவி பக்கீராள் பானு (32), மகன் ஷேக் மன்சூர் (3), பக்கீராள் பானுவின் சகோதரியான பத்தமடை கவர்னர் தெருவைச் சேர்ந்த மைதீன் பட்டாணி மனைவி ரகுமத் பீவி (28), அவருடைய மகள் அபிதா பாத்திமா (6) ஆகிய 5 பேரும் ஆட்டோவில் நெல்லையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று கொண்டிருந்தனர். ஆட்டோவை காதர் மைதீன் ஓட்டினார். இந்த ஆட்டோ பத்தமடை குளத்து பகுதியில் உள்ள சாலையில் சென்று கொண்டு இருந்தது. அந்த சமயத்தில் அங்கு பொக்லைன் எந்திரம் மூலம் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராட்சத ஆலமரத்தை அகற்றும் பணி நடந்தது. இதில் திடீரென அந்த ஆலமரம் வேரோடு சாய்ந்து சாலையில் சென்ற ஆட்டோ மீது விழுந்தது.
இதில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. ஆட்டோவில் இருந்த காதர் மைதீன், ரகுமத் பீவி ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற 3 பேரும் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அவர்களுடைய உறவினர்கள் சம்பவம் நடந்த பகுதிக்கு திரண்டு வந்தனர். பின்னர் காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சேரன்மாதேவி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர்கள் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பொக்லைன் எந்திரத்தை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது.
இதுபற்றி தகவல் அறிந்த பத்தமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அங்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும் வரை இறந்தவர்களின் உடல்களை எடுக்கவிடமாட்டோம் என்று கூறினர். மேலும், எந்தவித முன் அறிவிப்பும் இன்றி மரங்களை அகற்றும் பணி நடைபெற்ற காரணத்தால்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது என்று கூறி இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சேரன்மாதேவி ரவுண்டானாவில் நான்கு புறங்களிலும் மோட்டார் சைக்கிள்களை வரிசையாக நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. நான்கு புறங்களிலும் ஏராளமான பஸ்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நின்றன.
இதுபற்றி அறிந்த ெநல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், சேரன்மாதேவி உதவி கலெக்டர் சிந்து, துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்கள், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக தலா ரூ.2 கோடி வழங்க வேண்டும். அரசு வேலை வழங்க வேண்டும். சாலை விரிவாக்க பணி ஒப்பந்ததாரர், பொக்லைன் எந்திர டிரைவர் மற்றும் உரிமையாளர் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், அதுவரை உடல்களை எடுக்க விடமாட்டோம் என்றும் கூறினர்.
அதற்கு அதிகாரிகள், இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து சேரன்மாதேவி தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் மரத்தை எந்திரங்களைக் கொண்டு வெட்டி அகற்றினர். பின்னர் போலீசார், இறந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக பத்தமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை அருகே சாலை விரிவாக்க பணியின்போது ஆட்டோ மீது மரம் விழுந்ததில் பெண் உள்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.