கர்நாடகத்தில் தொடர் கனமழை; மின்னல் தாக்கி பெண் சாவு
கர்நாடகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. மின்னல் தாக்கி பெண் உயிரிழந்தார்.
பெங்களூரு: கர்நாடகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. மின்னல் தாக்கி பெண் உயிரிழந்தார்.
சுரங்கப்பாதைகளில் தேங்கிய தண்ணீர்
கர்நாடகத்தில் பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், மாலை நேரத்தில் தினமும் மழை பெய்து வருகிறது. தலைநகர் பெங்களூருவில் தினமும் மாலையில் இருந்து இரவு முழுவதும் மழை பெய்து கொண்டே இருக்கிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துவிடுவதும், அதை மக்கள் பாத்திரங்களில் பிடித்து வெளியே ஊற்றுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதுபோல் சில சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்து உள்ளன. மின்கம்பங்களும் சேதம் அடைந்து உள்ளன. ரெயில்வே சுரங்க பாதைகளையும் மழைநீர் சூழ்ந்து உள்ளது. இந்த நிலையில் வடகர்நாடக மாவட்டங்களான தார்வார், தாவணகெரே, விஜயநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று மதியத்தில் இருந்து கனமழை பெய்தது.
மின்னல் தாக்கி பெண் சாவு
கனமழைக்கு தாவணகெரே பகுதியில் ஒரு ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்தது. உப்பள்ளியில் பலத்த சூறைக்காற்றுடன் பெய்த கனமழைக்கு வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தன. பெங்களூரு புறநகர் நெலமங்களா வழியாக செல்லும் மங்களூரு-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் குளம்போல தேங்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து உள்ளனர். துமகூரு மாவட்டத்திலும் நேற்று மழை வெளுத்து வாங்கியது.
குனிகல் தாலுகா உலியூர்துர்கா அருகே பூதனஹள்ளி கிராமத்தில் மின்னல் தாக்கி லட்சுமம்மா என்ற பெண் உயிரிழந்தார். மழையால் மாலை நேரத்தில் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.