மதுரை அரசு மருத்துவ கல்லூரி டீனாக ரத்தினவேல் மீண்டும் பொறுப்பேற்பு
மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு விவகார சர்ச்சைக்கு பின்னர், மீண்டும் மதுரை அரசு மருத்துவ கல்லூரி டீனாக ரத்தினவேல் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.
மதுரை,
மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு விவகார சர்ச்சைக்கு பின்னர், மீண்டும் மதுரை அரசு மருத்துவ கல்லூரி டீனாக ரத்தினவேல் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.
உறுதிமொழி சர்ச்சை
மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான உறுதிமொழி ஏற்பின் போது சமஸ்கிருத வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த சர்ச்சை காரணமாக, மருத்துவ கல்லூரி டீனாக இருந்த ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக துறை ரீதியாக விசாரணை நடந்தது. மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபுவும் நேரில் வந்து டீன் ரத்தினவேல் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினார்.
இதனை தொடர்ந்து சட்டமன்றத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது, மதுரை டீனுக்கு மீண்டும் அதே பொறுப்பு வழங்கப்படும் என அறிவித்தார்.
மீண்டும் பொறுப்பேற்பு
அதன் தொடர்ச்சியாக மதுரை அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் அறையில், டீனாக ரத்தினவேல் நேற்று மீண்டும் பொறுப்பேற்றார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “கடந்த 30-ந்தேதி மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. சமஸ்கிருதத்தில் இருந்ததை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, மாணவர் பேரவை நிர்வாகிகள் வாசித்து விட்டனர். அவர்கள் இதுகுறித்து யாரிடமும் ஆலோசிக்காமல் செய்து விட்டனர்.
மேடையில் உறுதிமொழியை படிக்கும்போதுதான் அதில் இருக்கும் தவறு கல்லூரி நிர்வாகத்திற்கு தெரியவந்தது. அன்று நடந்த தவறுக்கு, மருத்துவ கல்வி இயக்குனர் கடந்த 3-ந்தேதி, கல்லூரி நிர்வாகத்தினர், பேராசிரியர்கள், மாணவர் பேரவை நிர்வாகிகள் என அனைவரிடமும் விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தார். அதுபோல், நானும் அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் தவறுதலாக இது நடந்து விட்டது என விளக்கம் அளித்தேன். மதுரை மருத்துவ கல்லூரியின் சார்பாக வருத்தத்தையும் தெரிவித்தோம்.
முதல்-அமைச்சருக்கு நன்றி
அதனை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு அமைச்சர், கொண்டு சென்றார். அதன் காரணமாகவும், எங்களின் சேவை காரணமாகவும் மீண்டும் டீனாக பணி செய்யும் வாய்ப்பினை அரசு வழங்கி உள்ளது. அதன்படி மதுரை அரசு மருத்துவ கல்லூரி டீனாக பொறுப்பேற்கிறேன். உடனடியாக முடிவு செய்து கருணை உள்ளத்தோடு உத்தரவினை பிறப்பித்த முதல்- அமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எங்களின் பணியை அங்கீகரித்து ஒத்துழைப்பு வழங்கிய அமைச்சர்களுக்கும், உதவிய அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கிறேன். தொடர்ந்து புதிய உத்வேகத்துடன் மருத்துவ கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரி வளர்ச்சிக்கு பாடுபடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.