கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் வாக்குவாதம்
கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது
கும்பகோணம்
கும்பகோணம் மாநகராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணைமேயர் சு.ப.தமிழழகன், மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க. மற்றும் சுயேச்சை கவுன்சிலர்கள் 48 பேர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளவேண்டிய பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், மாநகராட்சி நிர்வாகத்தின் வருவாயை பெருக்குவதற்கு தேவையான வழிமுறைகள் குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில், மாநகராட்சி பகுதியில் அதிகரித்துவரும் கொசு தொல்லையை ஒழிக்க ரூ.23 லட்சத்தில் புதிய திட்டம் தீட்டப்பட்டு செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
குடிநீர் நிறுத்தம்
பின்னர் கவுன்சிலர்கள் பேசியதாவது:-
முருகன் (தி.மு.க.):- கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் பராமரிப்பு பணிகள் காரணமாகவும், வேறு சில காரணங்களுக்காகவும் அவ்வப்போது குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. முன்னறிவிப்பின்றி குடிநீர் நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் மற்றும் ஓட்டல், கடைகள் நடத்துபவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும்.
துணை மேயர் சு.ப.தமிழழகன்: குடிநீர் நிறுத்தம் குறித்து முன்னறிவிப்பு செய்யவும் மாற்று ஏற்பாடுகள் செய்து தரவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
வாக்குவாதம்
பத்மகுமரேசன்(அ.தி.மு.க.) அம்மா உணவக ஊழியர்களுக்கு சம்பளம் குறைவாக தரப்படுகிறது என்று குற்றம்சாட்டி பேசினார். இதுதொடர்பாக அவருக்கும், துணை மேயருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து பேசிய தமிழழகன், அம்மா உணவக ஊழியர்களுக்கு சம்பளம் குறைவாக வழங்கப்படவில்லை. தாராசுரம் அறிஞர் அண்ணா காய்கறி மார்க்கெட்டில் ஏராளமான கடைகள் இருந்தும் ஆண்டு வருமானம் குறைவாகவே உள்ளது. இதனால் மாநகராட்சி நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுவதால் வருவாயை ரூ.5 கோடியாக உயர்த்த மார்க்கெட் பகுதியை 3 ஆக பிரித்து குத்தகைக்கு விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.