கீழடியில் சுடுமண் செங்கல் கட்டிடம், சுவர் கண்டுபிடிப்பு

கீழடியில் சுடுமண் செங்கல் கட்டிடம், சுவர் கண்டறியப்பட்டன

Update: 2022-05-05 20:05 GMT
திருப்புவனம், 
திருப்புவனம் யூனியனைச் சேர்ந்த கீழடியில் 8-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனுடன் சேர்த்து கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளிலும் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. கீழடியில் இதுவரை மொத்தம் 5 குழிகள் தோண்டப்பட்டு உள்ளன. இந்தக் குழிகளில் ஏற்கனவே பாசி மணிகள், கண்ணாடி மணிகள், சேதமுற்ற நிலையில் பானைகள், ஓடுகள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட பகடைக்காய், சிறுவர்கள்- பெண்கள் விளையாடும் சில்லுவட்டுகள் உள்பட பல பொருட்கள் கண்டறியப்பட்டன. தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் செய்ததில் பச்சை, சிவப்பு, ஊதா உள்பட பல கலர்களில் கண்ணாடி பாசி மணிகள் கிடைத்து வந்தன. சில தினங்களுக்கு முன்பு தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் செய்ததில் கீழடியில் மனித தலை உருவம் கொண்ட சுடுமண் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று ஒரு குழியில் சுமார் 6 அடி ஆழம் தோண்டியபோது சுடுமண் செங்கற்களால் ஆன கட்டிடம் தெரியவந்தது. இந்த கட்டிடம் செங்கல் சுவர் போல் உள்ளது. இதன் அருகிலேயே 2 சுடுமண் பானைகள் சேதமடைந்து உள்ளது.  செங்கல்கள் நன்கு அகலமாகவும், கனமாகவும் உள்ளது. பழங்காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் சுடுமண் செங்கற்களால் ஆன கட்டிடங்கள் கட்டி நாகரீகமாகவும் வாழ்ந்துள்ளதாக தெரியவருகிறது. கீழடியில் தொடர்ந்து ஆழமாக குழி தோண்டி அகழ்வாராய்ச்சி பணிகள் செய்யும்போது இன்னும் வியக்கத்தக்க பொருட்கள் அதிகமாக கிடைக்கும் என தெரிய வருகிறது. கீழடி அகழ்வாராய்ச்சி பகுதியின் இயக்குனர் சிவானந்தம் தலைமையில் உதவி இயக்குனர் ரமேஷ், தொல்லியல் அலுவலர்கள் அஜய், காவ்யா, சுரேஷ் உள்ளிட்ட தொல்லியல் குழுவினர் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்