ஆயுதப்படை போலீசாருக்கு கவாத்து பயிற்சி
நெல்லையில் ஆயுதப்படை போலீசாருக்கு கவாத்து பயிற்சி நடந்தது.
நெல்லை:
நெல்லை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் போலீசாருக்கான கூட்டு கவாத்து பயிற்சி கடந்த 18-ந் தேதி தொடங்கியது. இதில் போலீசாருக்கு உடல்திறன், ஆயுதங்களை கையாள்வது, கலவர கூட்டங்களை தடுப்பது, முக்கிய பிரமுகர் பாதுகாப்பு மற்றும் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியின் நிறைவு நாளான நேற்று வருடாந்திர கவாத்து அணிவகுப்பு நடைபெற்றது.
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் கலந்து கொண்டு, கவாத்தை ஆய்வு செய்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மேலும் போலீஸ் வாகனங்களையும், போலீசாரின் உடை மற்றும் பொருட்களையும் அவர் ஆய்வு செய்தார். இதில் மாநகர கிழக்கு துணை போலீஸ் கமிஷனர் டி.பி.சுரேஷ்குமார், நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் நாகசங்கர், ஆயுதப்படை உதவி கமிஷனர் முத்தரசு, இன்ஸ்பெக்டர் டேனியல் பிரபாகரன், நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் பிறைச்சந்திரன், வாகனப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராணி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.