திருவட்டார் அருகே கூட்டுறவு சங்கம் மூடப்பட்டதால் ஊழியர் ஏமாற்றம்
திருவட்டார் அருகே கூட்டுறவு சங்கம் மூடப்பட்டதால் ஊழியர் ஏமாற்றம்
திருவட்டார்,
திருவட்டார் அருகே உள்ள முதலார் பகுதியில் முதலார் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க அலுவலகம் உள்ளது. இங்கு வேர்க்கிளம்பியை சேர்ந்த வசந்தா என்பவர் முதல்நிலை எழுத்தராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 10 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், அவர் தனது கணவரின் மருத்துவ செலவுக்காக வருங்கால வைப்பு நிதி பணத்தில் இருந்து ஒரு பகுதியை கேட்டு கைத்தறி மாவட்ட அலுவலகத்தில் மனு அளித்தார். ஆனால் கூட்டுறவுதுறை சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இது குறித்து முதல்-அமைச்சரின் தனி பிரிவுக்கு மனு அனுப்பியுள்ளார்.
இதனையடுத்து நேற்று காலையில் வசந்தா சங்க அலுவலகத்திற்கு வந்த போது கதவு பூட்டப்பட்டு இருந்தது. இதனால், அவர் சிறிது நேரம் அமர்ந்து விட்டு ஏமாற்றமுடன் திரும்பிச் சென்றார்.
இது குறித்து மேலாளர் கிரிஜகுமாரிடம் கேட்டபோது, ‘சங்கம் நலிவடைந்த நிலையில் இருப்பதாகவும், நான் நாகர்கோவிலில் ஒரு வேலை தொடர்பாக செல்ல வேண்டியது இருந்ததால் அலுவலகத்தை பூட்டி விட்டுச்சென்றேன்’ என்றார்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது ேநரம் பரபரப்பு ஏற்பட்டது.