பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் தமிழிலேயே நடைபெற வேண்டும் என தமிழ் கூட்டமைப்பினர் அரசுக்கு கோரிக்கை

பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் தமிழிலேயே நடைபெற வேண்டும் என்று தமிழ் கூட்டமைப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-05-05 19:04 GMT
காரைக்குடி,
பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் தமிழிலேயே நடைபெற வேண்டும் என்று தமிழ் கூட்டமைப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தீர்மானம்
காரைக்குடியில் உள்ள தமிழ் இலக்கிய பேரவை மற்றும் நான்காம் தமிழ்ச்சங்கம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் கூட்டமைப்பின் சார்பில் பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் தமிழில் நடைபெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். 
இதுகுறித்து கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூறியதாவது:- ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்தநாட்டின் உயர் கல்வி அமைப்பை அடிப்படையாக கொண்டே அமையும். கிராமப் புற மாணவர்களுக்கும், பின்தங்கிய மற்றும் ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கும் உயர்கல்வியின் வாயில்களையும், வாய்ப்புக்களையும் திறந்து வைப்பதே பல்கலைக்கழகங்களின் நோக்கமாகும்.
 பட்டமளிப்பு விழா
பல்கலைக்கழகத்தில் படித்து தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் நடைபெறும். இந்த விழா ஆங்கிலேயர் காலத்தில் நடை பெற்றது போலவே இன்றும் பெரும்பாலான பல்கலைக் கழகங்களில் நடைபெற்று வருகிறது.
பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் உள்ள கவர்னர், இணை வேந்தர் பொறுப்பில் உள்ள உயர் கல்வித்துறை அமைச்சர், பல்கலைக் கழக துணைவேந்தர், பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்தும் சிறப்பு விருந்தினர், ஆட்சிக்குழு (சிண்டிகேட்) உறுப்பினர்கள், பேரவை செனட்) உறுப்பினர்கள், பட்டம் வாங்கும் மாணவர்கள் ஆகியோர் ஆங்கிலேயர் காலத்தில் அணிந்த அங்கிகளை போலவே அணியும் பழக்கம் இன்று வரை தொடர்கிறது. 
பட்டமளிப்பு விழா முழுவதும் ஆங்கில மொழிப் பயன்பாட்டில் மட்டுமே நிகழ்கிறது. பட்டமளிப்பு விழா பேருரையும் ஆங்கிலத்திலேயே அமைகின்றன. இதனால் தங்களது பிள்ளைகள் பட்டம் பெறும் நிகழ்ச்சியை காண வரும் ஆங்கில மொழி அறியாத பெற்றோர்களுக்கு ஒன்றுமே புரிவதில்லை. பட்டம் பெறும் மாணவர்கள் ஏற்றுக்கொள்ளும் உறுதிமொழியும் ஆங்கிலத்திலேயே இருப்பதால் அதுவும் அவர்களுக்கு விளங்குவதில்லை. 
தமிழ்நாட்டு பல்கலை கழகங்களில் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகள் இன்றும் ஆங்கிலத்திலேயே தொடர்வது வேதனைக்குரியது.
அரசு ஆணை
பட்டமளிப்பு விழா குழுவினர் பட்டமளிப்பு விழா அரங்கில் அணிவகுத்து வரும்போது மேற்கத்திய இசையே இசைக்கப் படுகிறது. இந்த முறை மாற வேண்டும். நம் தமிழ்நாட்டின் மங்கல இசையே இசைக்கப்பட வேண்டும். உடைஅமைப்பில் மாற்றம் வேண்டும். பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் அன்னை தமிழில், நடைபெற வேண்டும் அவ்வாறு நடைபெற்றால் மாணவர்களும், பெற்றோர்களும், தமிழ் ஆர்வலர்களும் பெரு மகிழ்ச்சி அடைவார்கள். 
தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பட்டமளிப்பு விழாக்கள் தமிழ் மொழி வாயிலாகவே நடைபெற வேண்டும் என தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

மேலும் செய்திகள்