ரெத்தினகிரீசுவரர் கோவில் சித்திரை திருவிழா தொடங்கியது
அய்யர்மலை ரெத்தினகிரீசுவரர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
குளித்தலை,
சித்திரை திருவிழா தொடக்கம்
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலையில் பிரசித்தி பெற்ற ரெத்தினகிரீசுவரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழாவிற்காக கடந்த 27-ந் தேதி முகூர்த்தகால் ஊன்றப்பட்டது. இதையடுத்து சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி விக்னேஷ்வரபூஜை, வாஸ்துசாந்தி போன்ற பூஜைகள் நடத்தப்பட்டன. மலையின் உச்சியில் உள்ள கோவில் கொடி கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடிக்கம்பத்தில் திருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது.
திருக்கல்யாணம்
இதன்பின்னர் சிறப்பு தீபாராதனைகள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு புஷ்ப விமானத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இன்று முதல் பகலில் பல்லக்கிலும் இரவில் பல்வேறு வகையான வாகனங்களிலும் சாமியின் வீதியுலா நடைபெற உள்ளது.
திருவிழாவையொட்டி வரும் 9-ந் தேதி திருக்கல்யாணம் மற்றும் சுந்தரருக்கு பொற்கிழியளித்தல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
12-ந்தேதி தங்க குதிரை வாகனத்தில் சாமி புறப்பாடு நடக்கிறது.
தேரோட்டம்
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 13-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாட்டினை அய்யர்மலை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கோவில் குடிபாட்டுக்காரர்கள் மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா ஊரடங்கு மற்றும் அரசின் அறிவிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இக்கோவில் திருவிழா நடத்தப்படவில்லை. இந்தநிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோவில் திருவிழா நடைபெற இருப்பது பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.