பாதுகாப்பு இல்லாமல் கட்டுமான பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகளால் விபத்து

குளித்தலை பகுதியில் பாதுகாப்பு இல்லாமல் கட்டுமான பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகளால் விபத்து ஏற்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-05-05 18:16 GMT
கரூர்
குளித்தலை,
லாரிகளில் கட்டுமானப்பொருட்கள்
கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் குளித்தலை வழியாக சென்று வருகின்றன. இதில் செங்கல், எம்.சாண்ட், ஜல்லிக்கற்கள் போன்ற கட்டுமான பொருட்கள் லாரிகளில் எடுத்து செல்லப்படுகின்றன. அவ்வாறு செல்லும் லாரிகள் பலவற்றில் மணல் போன்ற பொருட்களை எடுத்துச்செல்லும்போது தார்ப்பாய் போன்றவற்றை கொண்டு மூடி மறைத்து எடுத்து செல்லாமல் திறந்தவாறே சில லாரி டிரைவர்கள் கொண்டு செல்கின்றனர். இவ்வாறு செல்லும் போது அந்த லாரிகளில் இருந்து சிதறும் மண் துகள்கள் காற்றில் கலந்து சாலை எங்கிலும் சிதறி விழுகிறது. 
விபத்து ஏற்படும் அபாயம்
இதன் காரணமாக இந்த சாலையில் மோட்டார் சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகளின் மேல் அந்த மண் துகள்கள் பறந்து விழுவதால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை ஓட்ட முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மண் துகள்கள் காற்றில் பறந்து அவர்களின் கண்களில் விழுவதால் அவர்களது கண்கள் பாதிக்கப்படுவதோடு அவர்கள் சாலை விபத்தில் சிக்கக்கூடிய அபாய நிலை ஏற்படுகிறது. 
போலீசார் வாகன சோதனையில் ஈடுபடும் போது இதுபோல் செல்லும் லாரி டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்கின்றனர். இருப்பினும் பல லாரி டிரைவர்கள் தங்கள் லாரிகளில் ஏற்றி செல்லும் பொருட்களை மூடி மறைத்து கொண்டு செல்வதில்லை. எனவே இதுபோல் செல்லும் லாரி டிரைவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்