நாமக்கல்லில் செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்ட 12 கிலோ இறைச்சி பறிமுதல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை

நாமக்கல்லில் செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்ட 12 கிலோ இறைச்சி பறிமுதல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை

Update: 2022-05-05 18:12 GMT
நாமக்கல்:
கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட தேவநந்தா (16) என்ற சிறுமி இறந்தார் 50-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஷவர்மா மற்றும் பிரியாணி தயாரிக்கும் அவைச ஓட்டல்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நாமக்கல் நகரில் நேற்று மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் அருண் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் 15 கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது உணவு பாதுகாப்பு துறையின் பதிவு சான்று, உரிமம் பெற்று இருக்க வேண்டும். ஷவர்மா தயாரிப்பு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். செயற்கை வண்ணங்கள் பயன்படுத்த கூடாது. ஷவர்மாவை நன்றாக வேகவைத்து விற்பனை செய்ய வேண்டும். திறந்த வெளியில் வைத்து ஷவர்மா தயாரிக்க கூடாது. அன்றாடம் தேவைக்கு ஏற்ப இறைச்சியை கொள்முதல் செய்து, அன்றைய தினமே முழுவதையும் பயன்படுத்தி விட வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்த கூடாது. உடைந்த முட்டைகளை பயன்படுத்த கூடாது என அறிவுறுத்தினர்.
இந்த ஆய்வின் போது செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்ட சுமார் 12 கிலோ கோழி இறைச்சியை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர். மேலும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் உடைந்த முட்டைகளை பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் செய்திகள்