தமிழக அரசின் ஓராண்டு சாதனைகள் குறித்த ஆலோசனை கூட்டம்

தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சி நடத்துவது குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

Update: 2022-05-05 17:55 GMT
ராணிப்பேட்டை

தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சி நடத்துவது குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

ஆலோசனை கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைவதையொட்டி ஓராண்டில் செய்யப்பட்ட அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் உள்ளடக்கிய ‘ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி’ என்ற தலைப்பில் அரசு துறைகளை ஒருங்கிணைத்து புகைப்பட கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசியதாவது:-

கண்காட்சி அரங்குகள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பாக தமிழக முதல்வர் அறிவித்த மக்கள் நலத்திட்டங்கள்  செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தத் துறைகள் அனைத்தும் கண்காட்சி அரங்குகள் அமைத்து, துறைகளின் செயல்பாடுகளை விளக்கிட வேண்டும். நிகழ்ச்சியில் அரசு நலத்திட்டங்களை வழங்கிட வேண்டும். கண்காட்சி அரங்குகளை சிறப்பான முறையில் அமைத்து மக்கள் பார்த்து பயனடைய வேண்டும். 

கண்காட்சி அரங்கில் மருத்துவ முகாம்கள், அரசு இ-சேவைகள், காவல்துறையின் விழிப்புணர்வு நிகழ்வுகள் மற்றும் துறைகளின் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தினசரி நடந்திட வேண்டும். துண்டு பிரசுரங்கள் வெளியிடவேண்டும். குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், விற்பனை கடைகள், கண்காட்சிகள் இடம் பெறவேண்டும்.

10 நாட்கள்

இதுபோன்ற 25 அரங்குகள் அமைத்து காட்சிப்படுத்த சம்பந்தப்பட்ட துறைகள் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும். கண்காட்சி ராணிப்பேட்டை நகர் பகுதியில் தொடர்ந்து 10 நாட்கள் நடத்தப்படும். அதற்கான இடம் மற்றும் தொடக்க நாள் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அசோக் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்