இலங்கை சிறையில் சித்ரவதையை அனுபவித்தோம்

இலங்கை சிறையில் உணவு கிடைக்காமல் சித்ரவதையை அனுபவித்ததாக விடுதலையாகி வந்த மீனவர்கள் கண்ணீர் பேட்டி அளித்தனர்.

Update: 2022-05-05 17:46 GMT
ராமேசுவரம், 
இலங்கை சிறையில் உணவு கிடைக்காமல் சித்ரவதையை அனுபவித்ததாக விடுதலையாகி வந்த மீனவர்கள் கண்ணீர் பேட்டி அளித்தனர்.
கைது
ராமேசுவரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப் பட்டினம் பகுதியில் இருந்து கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 3 படகுகளில் மீன்பிடிக்க சென்ற 19 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற் படையால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறைச் சாலையில் அடைக்கப்பட்டனர். 
இதன் இடையே யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இந்த 19 மீனவர்களும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ராமேசு வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த 19 மீனவர்களும் இலங்கை கொழும்பில் இருந்து விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு நேற்று காலை சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கினர்.
இதில் 16 மீனவர்கள் மீன்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்த வாகனம் மூலம் சொந்த ஊரான ராமேசுவரம் பகுதிக்கு வந்து சேர்ந்தனர். மீதம் உள்ள 3 மீனவர்களும் ஜெகதாப்பட்டினம் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நடவடிக்கை
விடுதலையாகி வந்த மீனவர்கள் செங்கோல், நாகநாதன் ஆகியோர் கூறியதாவது:- யாழ்ப்பாணம் சிறையில் சரியான உணவு கிடைக்காமல் அதிக கஷ்டப்பட்டோம்.இன்னும் பல சித்ரவதையை வெளியே சொல்ல முடியாத அளவிற்கு அனுபவித்து உள்ளோம். சிறையில் இன்னும் 12 மீனவர்கள் சாப்பாடு கூட கிடைக்காமல் அதிக சித்ரவதைகளை அனுபவித்து வருகின்றனர். அந்த மீனவர்களையும் உடனடி யாக விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்