உளியநல்லூர் பகுதியில் விற்காமல் தேங்கி கிடக்கும் 50 ஆயிரம் நெல் மூட்டைகள்
உளியநல்லூர் பகுதியில் விளைவிக்கப்பட்ட 50 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனை செய்யப்படாமல் தேங்கி கிடக்கிறது. இதனை கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெமிலி
உளியநல்லூர் பகுதியில் விளைவிக்கப்பட்ட 50 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனை செய்யப்படாமல் தேங்கி கிடக்கிறது. இதனை கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
50 ஆயிரம் நெல் மூட்டைகள்
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தை அடுத்த உளியநல்லூர், கிருஷ்ணாகுளம், வெள்ளைகுளம், புலிதாங்கல், துறையூர், வேப்பேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் விளைவித்த 50 ஆயிரம் மூட்டை நெல்லை கடந்த இரண்டு மாதங்களாக விற்பனை செய்ய முடியாமலும், மழையிலிருந்து பாதுகாக்க முடியாமலும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
இது குறித்து உளியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவா சதாசிவம் தலைமையில் விவசாயிகள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களை சந்தித்து நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க குடோன் அமைக்க வேண்டும் என அலுவலர்கள் தெரிவித்ததன் அடிப்படையில் விவசாயிகள் அனைவரும் சேர்ந்து குடோனும் கட்டியுள்ளனர்.
கொள்முதல் செய்ய வேண்டும்
ஆனால் குடோன் அமைக்க சொன்ன அலுவலர்கள் கடந்த இரண்டு மாதங்களாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கவில்லை எனவும், இது தொடர்பாக பலமுறை அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது பல்வேறு காரணங்களை கூறி உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
விளைவித்த நெல்லை அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் விற்பனை செய்ய முடியாமலும், அடுத்த போக விவசாயம் செய்ய, விதை நெல், இடுபொருட்கள், விவசாய கூலி வழங்க போதுமான பொருளாதாரம் இன்றி பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். எனவே மாவட்ட கலெக்டரும், சம்மந்தப்பட்ட அலுவலர்களும் விவசாயிகளின் நலன் கருதி விரைவில் உரிய நடவடிக்கை எடுத்து உளியநல்லூர் பகுதிகளில் இரண்டு மாதங்களாக தேங்கியுள்ள 50 ஆயிரம் நெல் மூட்டைகளை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.