தாதம்பேட்டை வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம்
தாதம்பேட்டை வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் நடைபெற்றது.
தா.பழூர்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தாதம்பேட்டை பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் ஒவ்வொரு சித்திரை மாதம் ஹஸ்த நட்சத்திரம் கூடிய நாளில் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கோவில்கள் காலவரையின்றி மூடப்பட்டன. அதன்பிறகு கோவில்கள் திறக்க அனுமதிக்கப்பட்ட பிறகு 2021-ம் ஆண்டு பிரமோற்சவம் ஐப்பசி மாத ஹஸ்த நட்சத்திரத்தின்போது நடைபெற்றது. தற்போது கோவில்கள் வழிபாட்டிற்கு அரசு சார்பில் எந்த தடையும் இல்லாததால் வழக்கம்போல் சித்திரைமாத அஸ்த நட்சத்திரத்தில் பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. எனவே வருகிற 9-ந் தேதி காலை துவஜாரோகணம் என்னும் கொடியேற்றம் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து மாலை சந்திர பிரபையில் நம் பெருமான் எழுந்தருளி சேவை சாதிக்க உள்ளார். 2-ம் நாள் காலை பல்லக்கு புறப்பாடு, மாலை சேஷ வாகன பரமபதநாதன் திருக்கோலம், 3-ம் நாள் காலை கருட சேவை, மாலை அனுமந்த சேவை, 4-ம் நாள் காலை வெண்ணைத்தாழி புறப்பாடு, மாலையில் குதிரை வாகனம், 5-ம் நாள் காலை திருத்தேர் உற்சவம், தீர்த்தவாரி, மாலையில் புஷ்பயாகம் மற்றும் துவஜ அவரோகணம் (கொடி இறக்கம்), 6-ம் நாள் காலை விடையாற்றி உற்சவம் ஆகியவை நடைபெற உள்ளது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தாதம்பேட்டை வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் சரியான தருணத்தில் நடைபெற உள்ளது. அதுபோல் புதிய நூதன தேர் வெள்ளோட்டம் முடிந்து தேரோட்டத்திற்கு தயாராக உள்ளதால் இந்த ஆண்டு பிரம்மோற்சவம் மிகச்சிறப்பாக நடைபெறும் என்று கோவில் நிர்வாகத்தினரால் தெரிவிக்கப்பட்டது.