அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர் இடமாற்றம்
மாணவிகள் 5 பேரிடம் சில்மிஷம் செய்த அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
விழுப்புரம்,
விழுப்புரத்தை அடுத்த வளவனூர் அருகே உள்ள நன்னாட்டாம்பாளையத்தில் உள்ள அரசு நிதி உதவி பெறும் ஆரம்பப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் சாலையாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பாபு (வயது 48) என்பவர் அடிக்கடி பள்ளி மாணவிகளிடம் பாலியல் ரீதியாக சில்மிஷத்தில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்தது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அப்பள்ளியில் 4-ம் வகுப்பு மற்றும் 5-ம் வகுப்பு படித்து வரும் 5 மாணவிகளிடம் ஆசிரியர் பாபு, சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த மாணவிகளின் பெற்றோர், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் ஆசிரியர் பாபு மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் மாணவிகளிடம் சில்மிஷம் செய்த விவகாரம் தொடர்பாக ஆசிரியர் பாபுவை நன்னாட்டாம்பாளையம் அரசு நிதி உதவி பெறும் ஆரம்பப்பள்ளியில் இருந்து கண்டமானடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு இடமாற்றம் செய்தது நேற்று விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலர் சுந்தரமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.