குறளோவியம் போட்டி: வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார்
குறளோவியம் போட்டி: வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார்
நாமக்கல்:
குறளோவியம் போட்டியில் வெற்றி பெற்ற நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் ஸ்ரேயா சிங் பரிசு வழங்கினார்.
குறளோவியம் போட்டி
தமிழ் இணைய கல்விக்கழகத்தின் சார்பில் மாநில அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு குறளோவியம் என்ற பெயரில் ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் சிறந்த 365 ஓவியங்களை தேர்வு செய்து, போட்டியில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.
இந்த போட்டியில் தேர்வு செய்யப்பட்ட 365 ஓவியங்கள் திருக்குறள் குறளோவியம் தினசரி நாட்காட்டி புத்தகமாக அச்சிடப்பட்டு, பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கலெக்டர் பரிசு வழங்கினார்
இக்குறளோவிய போட்டியில் நாமக்கல் மாவட்டத்தில் வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் பிளஸ்-2 மாணவர் சந்தோஷ் ரூ.5 ஆயிரம் சிறப்பு பரிசிற்கு தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரி மாணவி மதுமிதா, ராசிபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் சந்தோஷ், காளிப்பட்டி மகேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி பிரியா, குமாரபாளையம் எக்ஸல் வணிகம் மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் குமணராஜ், மாணவி ரேணுகாதேவி, அணைப்பாளையம் பாவை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவன் விக்னேஸ்வரன் மற்றும் நல்லிபாளையம் கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி முகிஷா ஆகிய 7 மாணவ, மாணவிகள் ரூ.1,000-ம் ஊக்க பரிசிற்கும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த குறளோவிய போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் பரிசு, காசோலை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.