ரூ.7¾ கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்
தர்மபுரி நகரில் ரூ.7.77 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் மேற்கொள்ள நகராட்சி கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.
தர்மபுரி:-
தர்மபுரி நகரில் ரூ.7.77 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் மேற்கொள்ள நகராட்சி கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.
நகராட்சி கூட்டம்
தர்மபுரி நகராட்சி கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா கூட்ட அரங்கில் நடைபெற்றது. நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங்கினார். நகராட்சி துணை தலைவர் நித்யா அன்பழகன், நகராட்சி பொறியாளர் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார் நகராட்சியில் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்.
தர்மபுரி நகரில் ரூ.1½ கோடியில் பஸ் நிலைய மேம்பாட்டு பணிகள், 10-வது வார்டு அரிச்சந்திரன் மயான வளாகத்தில் ரூ.1½ கோடியில் எரிவாயு தகனமேடை, ரூ.58½ லட்சத்தில் கலைஞர் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 7 திட்டப்பணிகள், ரூ.72 லட்சத்தில் நகராட்சிக்கு 3 புதிய வாகனம் வாங்குதல், தர்மபுரி சந்தைப்பேட்டையில் ரூ.2½ கோடியில் அறிவுசார் மையம் மற்றும் நூலகம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் ரூ. 7 கோடியே 77 லட்சத்தில் மேற்கொள்ள நகராட்சி கூட்டத்தில் அனுமதிஅளிக்கப்பட்டது.
பள்ளி மேலாண்மை குழு
கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பேசுகையில், தர்மபுரி நகராட்சி பகுதியில் உள்ள14 நகராட்சி தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றிற்கு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களாக அந்தந்த பகுதி கவுன்சிலர்களை போடாமல் வேறு பகுதி கவுன்சிலர்களை மாற்றி நியமித்துள்ளனர். இந்தக் குழப்பமான நியமனங்களை மாற்றி அந்தந்த பகுதி மற்றும் அருகிலுள்ள பகுதி கவுன்சிலர்களை இணைத்து பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களாக நியமனம் செய்ய வேண்டும் என்றுகூறினர்.
11-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் முருகவேல் பேசுகையில், குமாரசாமிப்பேட்டை பகுதியில் குடிநீர் தொட்டி அமைத்து பல நாட்கள் ஆகியும் மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. அந்த மின் இணைப்புக்கு நகராட்சி சார்பில் கட்டணம் உடனே செலுத்தி மின்சாரம் பெற்றுத் தர வேண்டும் என்றார்.
இதற்கு பதில் அளித்து நகராட்சி ஆணையாளர் பேசுகையில், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் நியமனத்தில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். குமாரசாமிப்பேட்டையில் நகராட்சி குடிநீர் தொட்டிக்கு உடனடியாக மின் இணைப்பு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.