உறுப்பினர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்

உறுப்பினர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-05 18:30 GMT
சீர்காழி:
உறுப்பினர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என
சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
ஒன்றியக்குழு கூட்டம்
 சீர்காழி ஊராட்சி ஒன்றிய மன்ற கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்களின் சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் உஷா நந்தினி பிரபாகரன், இளங்கோவன், அருள்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் சுமதி வரவேற்றார்.
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ந் தேதி தமிழ்வளர்ச்சி நாளாகவும், அரசு விழாவாகவும் அறிவித்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல் வளர்ச்சிப்பணிகள் வரவு செலவு உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குடிநீர் தட்டுப்பாடு
பின்னர் உறுப்பினர்களிடையே நடந்த விவாதம் வருமாறு:-
துர்கா மதி (தி.மு.க):- கொண்டல் ஊராட்சியில் நூலக கட்டிடம் உள்ளது. ஆனால் புத்தகங்கள் இல்லை இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.எனவே நூலக கட்டிடம் புத்தகங்களோடு செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 பத்தக்குடி பகுதியில் சேதமடைந்த நிலையில் உள்ள பாலத்தை சீரமைக்க வேண்டும். ஊராட்சி முழுவதும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் கூடுதலாக கை பம்பு அமைக்க வேண்டும்.
நிலவழகி கோபி (தி.மு.க):-தென்னம்பட்டினம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஒன்றிய உறுப்பினருக்கு அழைப்பு இல்லை. பெருந்தோட்டம் கிராமத்தில் முழுமை பெறாமல் உள்ள சமுதாய கூட பணியை விரைந்து முடிக்க வேண்டும்
சேதமடைந்த நியாயவிலை கடை கட்டிடம்
ஜான்சிராணி, (சுயேச்சை):- ஒன்றியக்குழு உறுப்பினர்களின் கோரிக்கைகளை தலைவர், துணைத்தலைவர், ஆணையர்கள் உடனுக்குடன் நிறைவேற்ற முன்வரவேண்டும். கடந்த 2½ ஆண்டு வரவு செலவு கணக்குகளை உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
நடராஜன், (அ.தி.மு.க.):- திருநகரியில் உள்ள நான்கு கோவில் வீதிகளிலும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.இதனை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ஆனந்தி, (அ.தி.மு.க.) :-கன்னியாக்குடி ஊராட்சியில் சேதமடைந்த நியாயவிலை கடை கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும். 
நடராஜன், (சுயேச்சை):-ராதாநல்லூர் ஊராட்சியில் உள்ள அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தென்னரசு (தி.மு.க):- எடக்குடி வடபாதி, கதிராமங்கலம், மேலச்சாலை ஆகிய பகுதியில் உள்ள மண் சாலைகளை தார் சாலையாக அமைத்து தர வேண்டும். 
கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்
பஞ்சுகுமார், (தி.மு.க):- எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மண் சாலைகளை தார் சாலையாக மாற்றி அமைத்து தரவேண்டும். 
ஆணையர்கள்:- ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வளர்ச்சிப் பணிகள் வரவு செலவு உள்ளிட்ட சந்தேகங்களை எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தால் உரிய பதில் அளிக்கப்படும்.
கமலஜோதி தேவேந்திரன (தலைவர்):-ஒன்றியக்குழு உறுப்பினர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும், நிதி ஆதாரத்திற்கு தகுந்தார் போல் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்கு கூடுதல் நிதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர், தெரு மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படும். 
இவ்வாறு விவாதம் நடந்தது.
கூட்டத்தில் பொறியாளர்கள் கலையரசன், சிவக்குமார், தெய்வானை, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
---

மேலும் செய்திகள்