ராமநாதபுரம்,
கேரள மாநிலத்தில் சவர்மா சாப்பிட்ட மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சவர்மா குறித்து சோதனை நடத்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சவர்மா விற்பனை செய்யும் கடைகளில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். நேற்று முன்தினம் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 19 கடைகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் கருகிய நிலையில் சாப்பிட தகுதியற்ற நிலையில் இருந்த 8 கிலோ கோழிக்கறி பறிமுதல் செய்யப்பட்டு அந்த கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர உரிய விவரம் பதிவு இல்லாத சவர்மா சுற்றப்படும் பேப்பர்கள் வைத்திருந்ததாக 12 கிலோ காகிதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நேற்றும் இந்த சோதனை நடைபெற்று கோழிக்கறி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.