வேலூர் மாவட்டத்தில் 8-ந் தேதி 505 இடங்களில் தடுப்பூசி முகாம்

வேலூர் மாவட்டத்தில் வருகிற 8-ந் தேதி 505 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடக்க இருப்பதாக கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.

Update: 2022-05-05 17:05 GMT
குடியாத்தம்

வேலூர் மாவட்டத்தில் வருகிற 8-ந் தேதி 505 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடக்க இருப்பதாக கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.

கலெக்டர் ஆய்வு

வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் குடியாத்தம் பகுதியில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். குடியாத்தம் அடுத்த பரதராமியில் பிளஸ்-2 தேர்வை பார்வையிட்டார். தொடர்ந்து பரதராமி-குடியாத்தம் இடையே நடைபெறும் சாலை பணிகளையும், கல்லப்பாடியில் ரேஷன் கடையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் ராஜாகோவில் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் குடியிருப்புகள் கட்டுவது குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர் குடியாத்தம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் துறை சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் உதவி கலெக்டர் தனஞ்செயன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, தாசில்தார் லலிதா, நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு, மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேஷ்கண்ணா, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, கோவில் நிர்வாக அதிகாரிகள் திருநாவுக்கரசு, செந்தில்குமார், வட்டார மருத்துவ அலுவலர் விமல் குமார் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், வேளாண்மை மார்க்கெட்டிங் பிரிவு அலுவலர் லீலாவதி உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் கலெக்டர் குமரவேல் பாண்டியன் நிருபர்களிடம்  கூறியதாவது:-

கடைகள் அமைக்க தடை

குடியாத்தம் வழியாக வெளிமாநிலங்களிலிருந்து அதிக பாரம் ஏற்றி வரும் கனரக வாகனங்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் இருப்பதால் அந்த வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மரக்கட்டைகளை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக போட்டுள்ளனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கெங்கையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆற்றில் கடைகள் போடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றியபின் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என கோர்ட்டு உத்தரவு இருப்பதால் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆற்றுப்பகுதியில் கடைகள் அமைக்க கூடாது. கெங்கையம்மன் திருவிழாவை சிறப்பாக நடத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தடுப்பூசி முகாம்

வேலூர் மாவட்டம் கொரோனா தடுப்பூசி போட்டதில் தமிழகத்தில் முதல் மூன்று இடங்களுக்குள் உள்ளது. தடுப்பூசி போடாதவர்கள் போட்டுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பூஸ்டர் தடுப்பூசி போடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 12 வயதிற்கு மேல் உள்ள சிறுவர்கள், மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வருகிற 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 505 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது. தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அடுத்த அலை வந்தாலும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் .

கடந்த சில நாட்களாக வேலூர் மாவட்டத்தில் பல இடங்களில் சூறைக் காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் வாழை, நெல், மா உள்ளிட்ட விவசாய பயிர்கள் சேதம் அடைந்ததாக தகவல்கள் வந்துள்ளன. இது குறித்து ஓரிரு நாளில் ஆய்வு அறிக்கை வந்தபின் உரியவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

மேலும் செய்திகள்