கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 30 ஆயிரத்து 362 மாணவ- மாணவிகள் எழுதினர்
கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 30 ஆயிரத்து 362 மாணவ- மாணவிகள் எழுதினர். தேர்வு மையத்தை கலெக்டர் பாலசுப்பிரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
கடலூர்,
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. கடலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை 15 ஆயிரத்து 136 மாணவர்கள், 15 ஆயிரத்து 842 மாணவிகள் என மொத்தம் 30 ஆயிரத்து 978 மாணவர்களும், தனித்தேர்வர்கள் 297 பேர் என மொத்தம் 31 ஆயிரத்து 275 பேர் எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக தனித்தேர்வு மாணவர்களுக்கு 7 மையங்களும், மற்ற மாணவர்களுக்கு 121 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டு இருந்தன.
கொரோனா பாதிப்புக்கு பிறகு நடக்கும் நேரடி தேர்வு என்பதால் மாணவர்கள் ஆர்வத்துடன் தேர்வு மையத்திற்கு வந்தனர். காலை 10.15 மணிக்கு தேர்வு நடக்கும் என்று அறிவித்தாலும் மாணவர்கள் 9.45 மணிக்கு தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதன்படி மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக காலை 9 மணிக்கே வந்திருந்தனர்.
சிறப்பு பிரார்த்தனை
அவர்கள் தேர்வு மையத்திற்கு வெளியே, உள்ளே என அமர்ந்து படித்து கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது. தொடர்ந்து அவர்களுக்கு பள்ளிகளில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அப்போது மாணவர்கள் பதற்றமின்றி தேர்வு எழுதுவதற்காக ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தி பேசினர். தொடர்ந்து 9.45 மணிக்கு முதல் மணி அடிக்கப்பட்டதும் மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் சென்றனர்.
9.55 மணிக்கு 2-வது மணி அடித்த போது, அறை கண்காணிப்பாளர்கள் வினாத்தாள் உறையை பிரித்தனர். காலை 10 மணிக்கு 3-வது மணி அடித்ததும், வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. 10.10 மணிக்கு 4-வது மணி அடித்ததும் வினாத்தாளை படித்து பார்க்க நேரம் வழங்கப்பட்டது. தொடர்ந்து 5-வது மணி அடித்ததும் 10.15 மணிக்கு மாணவர்கள் தேர்வை எழுத தொடங்கினர். இந்த தேர்வு 1.15 மணிக்கு முடிவடைந்தது.
30,362 பேர் எழுதினர்
இந்த தேர்வை 30 ஆயிரத்து 362 மாணவ-மாணவிகள் எழுதினர். 913 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. கடலூர் மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களை ஊக்கப்படுத்தி அறிவுரை வழங்கினார். அவருடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி உடனிருந்தார்.
பறக்கும் படை
முன்னதாக தேர்வு மையத்தில் குடிநீர், மின்சார வசதி, கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது. மனவளர்ச்சி குன்றிய, மாற்றுத்திறனாளி குழந்தைகள் 180-க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதினர். அவர்களுக்கு சொல்வதை எழுதும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் சொல்ல, சொல்ல ஆசிரியர்கள் தேர்வு எழுதினர்.
தேர்வு மையங்களை 8 பறக்கும் படையினர், 223 நிலைப்படையினரும் ஆய்வு செய்தனர். முதல் நாள் நடந்த தமிழ் தேர்வு எளிதாக இருந்ததாக பெரும்பாலான மாணவர்கள் தெரிவித்தனர்.