போலி டாக்டரின் கிளினிக்கை முற்றுகையிட்டு பூட்டு போட்ட உறவினர்கள்

பேரணாம்பட்டில் போலி டாக்டர் அளித்த சிகிச்சையால் ஒருவர் இறந்ததாக கூறி உறவினர்கள், கிளினிக்கை முற்றுகையிட்டு பூட்டு போட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-05-05 16:50 GMT
பேரணாம்பட்டு

பேரணாம்பட்டில் போலி டாக்டர் அளித்த சிகிச்சையால் ஒருவர் இறந்ததாக கூறி உறவினர்கள், கிளினிக்கை முற்றுகையிட்டு பூட்டு போட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

சிகிச்சைபெற்றவர் சாவு

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு டவுன் திரு.வி.க. நகர் பாண்டியன் வீதியில் வசித்து வந்தவர் ரவி (வயது 50). இவர் கடந்த மார்ச் மாதம் 9-ந் தேதியன்று காதுக்கும் கண்ணுக்கும் நடுப்பகுதியில் கட்டி இருந்ததால் அதே பகுதியில் பிசியோதெரபிஸ்ட் சிவக்குமார் நடத்தி வரும் கிளினிக்கில் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் 14-ந் தேதியன்று வலி அதிகமானதால் சிவக்குமார் கத்தியை பயன்படுத்தி ஆபரேஷன் செய்ததாக கூறப்படுகிறது. 

இந்தநிலையில் ரவிக்கு பாதிப்பு அதிகமாகி மயங்கிய நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 10-ந் தேதி இறந்தார். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் ரவியின் மகன் அருண் புகார் செய்தார். அதில் சிவக்குமார் டாக்டருக்கு படிக்காமலேயே யாரிடமோ வேலை செய்த அனுபவத்தின் மூலம் மருத்துவ சிகிச்சையளித்ததால் தனது தந்தை ரவி இறந்துள்ளார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

தலைமறைவு

இதே போன்று பேரணாம்பட்டு அருகே மதினாப்பல்லி கிராமத்தை சேர்ந்த தங்கவேல் என்பவர் மனைவி மோகனா என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காய்ச்சல் காரணமாக சிவக்குமாரிடம் சிகிச்சை பெற்றதில் வலது கால் செயலிழந்து போனதால் திருப்பதி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மோகனாவிற்கு ஆபரேஷன் செய்து வலது கால் அகற்றப்பட்டது.

 இது குறித்து மோகனா பேரணாம்பட்டு போலீஸ் நிலையம், மாவட்ட கலெக்டர், மருத்துவ இணை இயக்குனர், பொது சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஆகியோருக்கு புகார்கள் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் போலி டாக்டர் சிவக்குமார் தனது கிளினிக்கை கடந்த 10 நாட்களுக்கு முன்பு மூடி விட்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது.

பூட்டு போட்டனர்

 இந்த நிலையில்  போலி டாக்டர் சிவக்குமார் வழக்கம் போல் தனது கிளினிக்கை திறந்து சிகிச்சையளித்து கொண்டிருந்தார். இதனையறிந்ததும், பாதிக்கப்பட்ட ரவி குடும்பத்தினர் மற்றும் மோகனா தரப்பினர் சிவக்குமார் கிளினிக்கை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். உடனே சிவக்குமார் கிளினிக்கை பூட்டிவிட்டு மீண்டும் தலைமறைவானார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சிவகுமார் கிளினிக்குக்கு பூட்டு போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்