காதல் திருமணத்தை பதிவு செய்ய வந்த இடத்தில் இரு தரப்பினர் மோதல்
காதல் திருமணத்தை பதிவு செய்ய வந்த இடத்தில் இரு தரப்பினர் மோதிக்கொண்டனர். இதனால் ஊத்தங்கரையில் பரபரப்பு ஏற்பட்டது.
ஊத்தங்கரை:-
காதல் திருமணத்தை பதிவு செய்ய வந்த இடத்தில் இரு தரப்பினர் மோதிக்கொண்டனர். இதனால் ஊத்தங்கரையில் பரபரப்பு ஏற்பட்டது.
காதல் திருமணம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சந்தகொட்டாவூர் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியவாணி. ஏ.கே.மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
இதற்கிடையே சத்தியவாணியை, கார்த்திக் கடத்தி சென்றதாக அந்த பெண்ணின் உறவினர்கள் ஊத்தங்கரை போலீசில் புகார் செய்தனர். இதற்கிடையே போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதைதொடர்ந்து திருமணத்தை பதிவு செய்ய இரு வீட்டாரும் முடிவு செய்தனர்.
இரு தரப்பினர் மோதல்
அதற்காக ஊத்தங்கரை சார் பதிவாளர் அலுவலகத்துக்கு இரு வீட்டாரும் நேற்று வந்தனர். அப்போது சாட்சி கையெழுத்தி்ட மாமனாரை கார்த்திக் அழைத்தார். அதற்கு அவர் வர மறுத்ததாக தெரிகிறது. இதில் கோபம் அடைந்த கார்த்திக், மாமனாரை தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது.
அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். அதன்பிறகு அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். அதன்பிறகு திருமணம் பதிவு செய்யப்பட்டது. காதல் தம்பதி மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர். இந்த சம்பவத்தால் ஊத்தங்கரை சார் பதிவாளர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.