குண்டடம் அருகே மின்னல் தாக்கி 5 ஆயிரம் கோழிகள் செத்தன
குண்டடம் அருகே மின்னல் தாக்கி 5 ஆயிரம் கோழிகள் செத்தன
குண்டடம்,
குண்டடம் அருகே மின்னல் தாக்கி 5 ஆயிரம் கோழிகள் செத்தன.
கோழிப்பண்ணை
திருப்பூர் மாவட்டம் குண்டடத்தை அடுத்துள்ள பெரிய குமாரபாளையம் சாம்பக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவர் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் விவசாய நிலத்தில் கோழிப்பண்ணை அமைத்துள்ளார். இந்த பண்ணையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சுகள் இருந்தன.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் குண்டடம் பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது அந்த பகுதியில் பயங்கர சத்தத்துடன் இடி விழுந்து, மின்னல் தாக்கியது. இதனால் திடுக்கிட்டு எழுந்த ராமசாமி வீட்டை விட்டு வெளியே வந்து கோழிப்பண்ணையை பார்த்தார். அப்போது கோழிப்பண்ணை தீப்பற்றி எரிந்தது. உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பண்ணையில் ஏற்பட்ட தீயினை தண்ணீர் ஊற்றி அணைத்தார்.
5 ஆயிரம் கோழிகள் செத்தன
ஆனால் பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த 5 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி செத்தன. இவற்றின் மதிப்பு ரூ.3½ லட்சமாகும். மேலும் கோழிப் பண்ணை செட் மற்றும் பண்ணையில் இருந்த எலக்ட்ரிக் உபகரணங்கள், கோழி தீவனம், தளவாட பொருட்கள் என மொத்தம் ரூ.17 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் பேரிடர் நிவாரண நிதி தமிழக அரசு வழங்க வேண்டும் என விவசாயி ராமசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் குண்டடம் பகுதியில் கடந்த வாரத்தில் மேட்டுக்கடை அடுத்த ஒத்தக்கடையில் ஒரு கூலித் தொழிலாளி வீடு சேதம் அடைந்தது. இந்த நிலையில் இரண்டாவது தடவையாக பெரிய குமாரபாளையத்தில் கோழிப்பண்ணை மீது மின்னல் தாக்கியதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.