உடுமலை போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு

உடுமலை போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு

Update: 2022-05-05 16:05 GMT
போடிப்பட்டி:
உடுமலையில் வீடு புகுந்து தூங்கிக்கொண்டிருந்தவர்களிடம் நகை, பணத்தை திருடிச்சென்றவனை 24 மணி நேரத்துக்குள் மடக்கிப் பிடித்த உடுமலை போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தங்க சங்கிலி
உடுமலையில் கணினி மையம் நடத்தி வரும் அனீஸ், மனைவி மற்றும் மாமியாருடன் நேரு வீதியில் குடியிருந்து வருகிறார். சம்பவத்தன்று அனீஸ் மனைவியுடன் உள் அறையில் தூங்கிய நிலையில் உடல் நிலை சரியில்லாத மாமியார் வெளியே தூங்கியுள்ளார். நள்ளிரவில் உள் பக்க அறையிலிருந்த டிவி, லேப்டாப் மற்றும் செல்போன் மற்றும் ரூ.5 ஆயிரம் ஆகியவை காணாமல் போனது தெரிய வந்துள்ளது. அத்துடன் அனீஸின் மாமியார் கழுத்திலிருந்த 4½ பவுன் தங்க சங்கிலியையும் மர்ம ஆசாமி கழட்டிச் சென்றுள்ளார். 
இதுகுறித்து உடுமலை போலீஸ் நிலையத்தில் அனீஸ் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு தேன்மொழிவேல் தலைமையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுஜாதா, சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் கோபால், பெருமாள், மணி, மாசி, சசி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து குற்றவாளியை வலைவீசி தேடி வந்தனர்.
ஒடிசா வாலிபர்
நேற்று காலை ஏரிப்பாளையம் பகுதியில் தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் நடந்து வந்த வட மாநில வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தவுடன் சந்தேகமடைந்த போலீசார் அவரை சோதனை செய்த போது நேரு வீதியில் திருட்டு போன 4½ பவுன்  சங்கிலி அவரிடம் இருப்பது தெரிய வந்தது. மேலும் அவர் தங்கியிருந்த இடத்தில் சோதனை செய்த போது திருட்டு போன டிவி, லேப்-டாப், 2 மொபைல் போன் மற்றும் பணத்தை போலீசார் கைப்பற்றினர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தைச்சேர்ந்த ரமேஷ் சந்திர மொஹந்தி என்பவரது மகன் பிஜய்குமார் மொஹந்தி (வயது 34) என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையிலடைத்தனர். திருட்டு நடந்த 24 மணி நேரத்துக்குள் குற்றவாளியைக்கைது செய்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.

மேலும் செய்திகள்