கிசான் திட்டத்தில் புதிய விவசாயிகளும் இணைந்து கொள்ளலாம் என்று வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
கிசான் திட்டத்தில் புதிய விவசாயிகளும் இணைந்து கொள்ளலாம் என்று வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
போடிப்பட்டி,
ஆண்டுதோறும் ரூ. 6 ஆயிரம் பெறும் பி.எம்.கிசான் திட்டத்தில் புதிய விவசாயிகளும் தற்போது இணைந்து கொள்ளலாம் என்று வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய விவசாயிகள்
மத்திய அரசின் பி.எம்.கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகள் நல நிதியாக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இந்த தொகை ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. உடுமலை வட்டாரத்தில் பெரும்பாலான விவசாயிகள் இந்த திட்டத்தில் இணைந்து பயனடைந்து வருகின்றனர்.
நீண்ட நாட்களாக இந்த திட்டத்துக்கான இணையதள முகப்பு திறக்காததால் புதிய விவசாயிகள் திட்டத்தில் இணைவதில் சிக்கல் நிலவி வருவதாக விவசாயிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.
இந்தநிலையில் தற்போது பி.எம்.கிசான் இணையதளம் திறக்கப்பட்டுள்ளதால் இதுவரை இந்த திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளாத விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று வேளாண்மைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விரல் ரேகை
இதுகுறித்து வேளாண்மைத்துறையினர் கூறியதாவது:-
பி.எம்.கிசான் விவசாயிகள் நல நிதி திட்டத்தில் இதுவரை இணையாத விவசாயிகள், புதிதாக நிலம் வாங்கிய அல்லது வாரிசுப்படி நிலம் பெற்ற புதிய விவசாயிகள் இந்த திட்டத்தில் இணையலாம்.தற்போது இதற்கான இணையதளம் திறக்கப்பட்டுள்ளதால் அருகிலுள்ள பொது சேவை மையங்களுக்கு சென்று தங்களை இந்த திட்டத்தில் இணைத்துக் கொண்டு பயனடையலாம். நடப்பு மே மாதம் 31-ந்தேதி வரை மட்டுமே இணையதளம் திறந்திருக்கக் கூடும் என்பதால் விவசாயிகள் விரைந்து பதிவு செய்து கொள்ளவும்.
மேலும் ஏற்கனவே இந்த திட்டத்தில் இணைந்து பணம் பெற்று வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் அட்டை மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் போன் எடுத்துக் கொண்டு பொது சேவை மையத்துக்கு சென்று தங்கள் விரல் ரேகை பதிவு செய்து அப்டேட் செய்து கொள்ளவும்.
இவ்வாறு விரல் ரேகை அப்டேட் செய்த விவசாயிகளுக்கு மட்டுமே அடுத்த தவணை பணம் கிடைக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.