பொள்ளாச்சி அருகே புதுப்பிக்கப்பட்ட பங்களா கோர்ட்டு திறப்பு
பொள்ளாச்சி அருகே கோமங்கலம்புதூரில் 500 ஆண்டுகள் பழமையான பங்களா கோர்ட்டு புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே கோமங்கலம்புதூரில் 500 ஆண்டுகள் பழமையான பங்களா கோர்ட்டு புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டு உள்ளது.
பங்களா கோர்ட்டு
பொள்ளாச்சி அருகே கோமங்கலம்புதூரில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நுழைவு வாயில் உள்ளது. இந்த நுழைவு வாயில் கட்டிடம் நவீன தொழில்நுட்பத்தை கொண்டு கட்டப்பட்டதை போன்று இருக்கும். அந்த காலத்தில் கோமங்கலம்புதூருக்கு வருவதற்கு வேறு வழி எதுவும் கிடையாது. இந்த வழியாக மட்டும் தான் வர முடியும். நுழைவு வாயில் வருவோர் அதே பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் வழிபடுவது வழக்கம்.
இந்த நுழைவு வாயிலின் ஒருபுறம் பஞ்சாயத்து தலைவர்களும், ஒருபுறமும் தவறு செய்தவர்களை நிறுத்தி பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. இதனால் அந்த நுழைவு வாயில் பங்களா கோர்ட்டு என்று அழைக்கப்படுகிறது. இந்த நுழைவு வாயிலில் லாரி மோதியதால் இருபுறமும் இருந்த தூண்கள் சேதமடைந்தன. இதை தொடர்ந்து பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.3 லட்சம் செலவில் பங்களா கோர்ட்டு புதுப்பிக்கும் பணி நடைபெற்றது.
குழந்தைகள் திறந்து வைத்தனர்
இந்த நிலையில் பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து திறப்பு விழா நடைபெற்றது. இதையொட்டி நுழைவு வாயின இருபுறமும் மாவிலை தோரணம் கட்டி, பூக்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேள, தாளத்துடன் புதுப்பிக்கப்பட்ட பங்களா கோர்ட்டை குழந்தைகள் ஒன்று சேர்ந்து திறந்து வைத்தனர். மேலும் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில் கோபுரத்தின் ஓவியமும் வரையப்பட்டு இருந்தது. விழாவிற்கு ஊர் மக்கள் திரண்டு வந்திருந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
பங்களா கோர்ட்டில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த வள்ளி திரைபடம் மற்றும் மம்முட்டி நடித்த மலையாள படத்திற்கும் படப்பிடிப்பு நடந்து உள்ளது.
இங்கு மார்கழி, புரட்டாசி, கிருஷ்ண ஜெயந்தியின் போது வீதி உலா நடைபெறும். அப்போது பெருமாளை இந்த மேடையில் வைத்து தான் பஜனை பாடல்கள் பாடி வழிபாடு செய்வது நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் கிராமத்தின் பாராம்பரியத்தை பறைசாற்றும் வகையில் இந்த பங்களா கோர்ட்டை புனரமைத்து உள்ளோம். மேலும் வருங்கால சந்ததிகள் இதன் பெருமையை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக புதுப்பிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.