பொள்ளாச்சியில் சாலை விரிவாக்கம்: வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

பொள்ளாச்சியில் சாலை விரிவாக்கம் செய்வதற்கு வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

Update: 2022-05-05 15:19 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் சாலை விரிவாக்கம் செய்வதற்கு வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

வாகனங்கள் கணக்கெடுப்பு

தமிழகத்தில் உள்ள முக்கிய சாலைகளில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாகனங்கள் கணக்கெடுக்கப்படும். வாகன பெருக்கத்திற்கு ஏற்ப சாலை அகலப்படுத்துதல் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த நிலையில் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெறவில்லை. 
இந்த நிலையில் பொள்ளாச்சி கோட்டத்தில் நேற்று நெடுஞ்சாலைத்துறை மூலம் வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதேபோன்று வால்பாறை, கிணத்துக்கடவு, ஆனைமலை பகுதிகளிலும் வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

சாலை விரிவாக்கம்

ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை முக்கிய சாலைகளில் வாகனங்கள் கணக்கெடுப்பு நடத்தப்படும். இதை தொடர்ந்து வாகனங்கள் அதிகரிப்பிற்கு ஏற்ப சாலைகள் அகலப்படுத்தப்படும். பொள்ளாச்சி கோட்டத்தில் முதற்கட்டமாக பாலக்காடு ரோட்டில் நகராட்சி அலுவலகம் முன், மார்க்கெட் ரோட்டில் திருவள்ளுவர் திடல், வால்பாறை ரோட்டில் சூளேஸ்வரன்பட்டி, நடுப்புணி ரோட்டில் வடக்கிபாளையம் பிரிவு, தாராபுரம் ரோட்டில் ஊஞ்சவேலாம்பட்டியிலும் கணக்கெடுக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இதை தொடர்ந்து நகரங்கள் மட்டுமல்லாது கிராமங்களில் உள்ள முக்கிய சாலைகளில் வாகனங்கள் கணக்கெடுக்கப்படும். ஒரு வாரத்திற்கு கணக்கெடுப்பு நடத்தப்படும். இதை தொடர்ந்து வாகனங்கள் கணக்கெடுப்பு குறித்த விவரங்கள் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் சாலை விரிவாக்கம் செய்ய வேண்டிய இடங்களை ஆய்வு செய்து அரசுக்கு நிதி கேட்டு கருத்துரு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்