கூலி உயர்வு கேட்டு டாஸ்மாக் சுமை பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கூலி உயர்வு கேட்டு டாஸ்மாக் சுமை பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி
டாஸ்மாக் குடோன்களில் மதுபாட்டில்கள் ஏற்று தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு பொள்ளாச்சியை அடுத்த ஆ.சங்கம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் அலுவலகம் முன் தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம், டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கிளை தலைவர் மாயவன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை செயலாளர் சுப்பிரமணியம் கலந்துகொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. இதில் செயலாளர் திருமலைராஜராம் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து சுமை பணி தொழிலாளர்கள் கூறுகையில், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் குடோன்களில் இருந்து மதுக்கடைகளில் வினியோகம் செய்வதற்கு மதுபாட்டில்களை லாரியில் ஏற்றுவதற்கு கூலி ஒப்பந்ததாரர்களால் வழங்கப்படுகிறது. ஒரு பெட்டிக்கு கூலி ரூ.1.50-யில் இருந்து ரூ.2.50 வரை ஒவ்வொரு குடோன்களிலும் ஒவ்வொரு மாதிரியாக ஒப்பந்ததாரர்களால் ஏற்ற, இறக்கமாக வழங்கப்படுகிறது. எனவே இதை ஒழுங்குப்படுத்தும் விதமாக அனைத்து குடோன்களிலும் சுமை பணி தொழிலாளர்களுக்கு ஒரே மாதிரியாக ஏற்று கூலி ஒரு பெட்டிக்கு ரூ.3.50 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பல குடோன்களில் ஒப்பந்ததாரர்கள் 3 மாதம் வரை ஏற்று கூலி பாக்கி வைத்து உள்ளனர். எனவே சுமை பணி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க கூலி பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் என்றனர்.