டீக்கடையில் விற்ற உளுந்தவடையில் ‘ரப்பர் பேண்ட்’
நிலக்கோட்டையில் உள்ள டீக்கடையில் விற்ற உளுந்தவடையில் ‘ரப்பர் பேண்ட்’ இருந்தது.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள நூத்துலாபுரத்தை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 48). மாற்றுத்திறனாளி. இவர் இன்று மதியம் நிலக்கோட்டையில் உள்ள ஒரு டீக்கடையில் 5 உளுந்தவடைகள் வாங்கினார்.
பின்னர் அவர் அந்த வடைகளை வீட்டிற்கு கொண்டு சென்றார். அங்கு அவர் சாப்பிடுவதற்காக ஒரு வடையை பிய்த்து பார்த்தார். அப்போது அதில் ‘ரப்பர் பேண்ட்’ இருந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதைத்தொடர்ந்து அவர் நிலக்கோட்டையில் உள்ள டீக்கடைக்கு சென்று உளுந்தவடையில் ‘ரப்பர் பேண்ட்’ இருந்தது குறித்து கேட்டார். இதற்கு டீக்கடைக்காரர், அவரை அவமரியாதையாக பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து முனியாண்டி நிலக்கோட்டை பேரூராட்சி அலுவலக அதிகாரிகளிடம் உளுந்தம்வடையில் ‘ரப்பர் பேண்ட்’ இருந்தது குறித்து மனு கொடுத்தார். அவர்கள் இதுகுறித்து விசாரித்து வருகிறார்கள்.