குடிநீர் பிரச்சினையை தீர்க்க மரக்காணத்தில் கூட்டுகுடிநீர் திட்டம்
குடிநீர் பிரச்சினையை தீர்க்க மரக்காணத்தில் கூட்டுகுடிநீர் திட்டத்தை அமைக்க விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் நேற்று காலை மாவட்ட ஊராட்சிக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஷீலாதேவிசேரன், ஊராட்சி செயலாளர் குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் 2021-2022-ம் ஆண்டின் மாநில நிதிக்குழு மானியத்தொகை ரூ.3.69 கோடி பெறப்பட்டதை பார்வைக்கு வைப்பது, மரக்காணம் ஒன்றியத்திற்குட்பட்ட கீழ்சித்தாமூர், ஓமந்தூர், வேங்கை, அன்னம்புத்தூர், கள்ளக்கொளத்தூர், கிருஷ்ணாபுரம் ஆகிய கிராமங்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் கூட்டு குடிநீர் திட்டத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அமைப்பதற்கு மாவட்ட கலெக்டர் மூலம் முன்மொழிவு அனுப்புவது மற்றும் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை மேற்கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.