மின்சாரம் தாக்கி பெண் சாவு
செஞ்சி அருகே மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.;
செஞ்சி,
செஞ்சி அருகே ராமராஜன் பேட்டையை சேர்ந்தவர் குப்பன். இவரது மனைவி சந்தியா (வயது 28). இவர்களது மகன் தர்ஷன் (3), நேற்று காலை சந்தியாவும், தர்ஷனும் அதே பகுதியில் உள்ள வயல் வெளி பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு ஜெயபால் என்பவரது நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை தர்ஷன் கவனிக்காமல் மிதித்ததாக தெரிகிறது. இதில் அவன் மீது மின்சாரம் தாக்கியது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த சந்தியா தனது மகனை காப்பாற்ற முயன்றார். அப்போது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே சந்தியா துடிதுடித்து இறந்தார். படுகாயம் அடைந்த தர்ஷன் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் நல்லான்பிள்ளை பெற்றாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.