தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
திண்டுக்கல்:
எரியாத தெருவிளக்கு
வடமதுரை பேரூராட்சி முத்துநகர் முதல்தெருவில் தெருவிளக்கு எரிவதில்லை. இரவில் அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கிவிடுகிறது. அதை பயன்படுத்தி வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதனால் பெண்கள் நடமாடவே பயப்படுகின்றனர். எனவே தெருவிளக்கை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - இந்திராணி கோபிநாதன், வடமதுரை.
பயன்படாத கழிப்பறை
தேனி அரண்மனைபுதூர் ஊராட்சியில் உள்ள ஆண்கள் கழிப்பறை தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. இதனால் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர். எனவே கழிப்பறையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். -குமார், தேனி.
சுகாதாரக்கேடு
வேடசந்தூரில், பழனி செல்லும் சாலையின் ஓரம் மிகவும் பள்ளமாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் பள்ளத்தில் மழைநீர் தேங்கி சகதிக்காடாக மாறிவிட்டது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. இது சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. அதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -லட்சுமிபதி, வேடசந்தூர்.
தெருவிளக்கு வசதி தேவை
சின்னமனூர் சிவகாமி அம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் நான்கு வழிச்சாலையில் தெருவிளக்கு வசதி இல்லை. இரவில் பாதசாரிகள், சைக்கிளில் செல்வோர் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். மேலும் திருடர்கள் தொல்லையும் அதிகமாக உள்ளது. எனவே தெருவிளக்கு வசதி செய்து தரவேண்டும். -சிவாஜி, சின்னமனூர்.
சாலை வளைவில் பள்ளம்
திண்டுக்கல் நாகல்நகர் மேம்பாலத்தின் பக்கவாட்டில் ரெயில் நிலையம் செல்லும் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டது. எனினும் இதுவரை பள்ளத்தை சரிசெய்யவில்லை. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கி கொள்கின்றனர். எனவே பள்ளத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். -கண்ணன், திண்டுக்கல்.
தேங்கி நிற்கும் மழைநீர்
ஆண்டிப்பட்டி பாலக்கோம்பை சாலையில் உள்ள ரெயில்வே பாலத்தின் கீழ் சாரல் மழைக்கு கூட மழைநீர் தேங்கி விடுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே மழைநீர் தேங்காமல் வடிந்து செல்வதற்கு வசதியாக கால்வாய் அமைக்க வேண்டும். -நந்தகோபால், ஆண்டிப்பட்டி.