விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 40,890 மாணவ- மாணவிகள் எழுதினார்கள்
பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இத்தேர்வை 40,890 மாணவ- மாணவிகள் எழுதினார்கள்.
விழுப்புரம்,
தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ்-2 பொதுத்தேர்வு தமிழ் தேர்வுடன் தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 28-ந் தேதி வரை நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை 186 மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 96 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது.
இத்தேர்வை எழுத 10 ஆயிரத்து 565 மாணவர்களும், 11 ஆயிரத்து 110 மாணவிகளும் என மொத்தம் 21 ஆயிரத்து 675 மாணவ- மாணவிகள் விண்ணப்பித்தனர். பொதுத்தேர்வு எழுத காலை 9 மணிக்கெல்லாம் மாணவ- மாணவிகள் தேர்வு மையத்திற்கு வந்தனர்.
21,276 பேர் தேர்வு எழுதினர்
சரியாக காலை 10 மணிக்கு மாணவ- மாணவிகளுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டது. வினாத்தாளில் என்னென்ன கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து படித்து பார்ப்பதற்காக கூடுதலாக 10 நிமிடம் ஒதுக்கப்பட்டது. பின்னர் 10.10 மணிக்கு விடைத்தாள்கள் வழங்கப்பட்டவுடன் அதில் மாணவ- மாணவிகள் தங்களது பெயர், பள்ளியின் பெயர் உள்ளிட்ட விவரங்களை எழுத 5 நிமிடம் ஒதுக்கப்பட்டு 10.15 மணிக்கு தேர்வு தொடங்கியது. காலை 10.15 மணியில் இருந்து மதியம் 1.15 மணி வரை தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை 21,276 மாணவ- மாணவிகள் எழுதினர். 399 பேர் தேர்வு எழுத வரவில்லை. கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு பொதுத்தேர்வு இந்த ஆண்டு முழுமையாக நடைபெறுகிறது.
பறக்கும் படையினர் கண்காணிப்பு
தேர்வில் மாணவர்கள் ஆள் மாறாட்டம், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், காப்பியடித்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடாமல் இருக்க கண்காணிக்கும் பணியில் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், முதுகலை, பட்டதாரி ஆசிரியர்கள் என 4,491 பேரும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் அடங்கிய 432 பறக்கும் படை குழுவினரும் ஈடுபட்டனர். பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கலெக்டர் ஆய்வு
விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பிளஸ்-2 தேர்வை மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் பார்வையிட்டார். அப்போது தேர்வு மையங்களில் தடையில்லா மின்சார வசதி கொடுக்கப்பட்டுள்ளதா எனவும் மாணவ- மாணவிகளுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளனவா என ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனர் பழனிச்சாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் பெருமாள், செந்தில்குமார், அலுவலக கண்காணிப்பாளர் கோகுலகண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
கள்ளக்குறிச்சி
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் 39 தேர்வு மையங்களிலும், திருக்கோவிலூா் கல்வி மாவட்டத்தில் 13 தேர்வு மையங்களும், உளுந்தூர்பேட்டை கல்வி மாவட்டத்தில் 21 தேர்வு மையங்கள் என மொத்தம் 73 தேர்வு மையங்களில் நடத்தப்பட்ட தேர்வில் 122 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 9,625 பேரும், மாணவிகள் 9,989 பேரும் என மொத்தம் 19,614 பேர் தேர்வு எழுதினர்.
தடையில்லா மின்சாரம்
கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் உள்ள நடைபெற்ற பிளஸ்-2 தேர்வை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், பிளஸ்-2 தேர்வு தொடங்கி வருகிற 28-ந்தேதி வரை நடைபெற உள்ளது. எனவே பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களில் தடையில்லா மின்சாரம், போக்குவரத்து வசதி, தீயணைப்பு பாதுகாப்பு, தேர்வு மைய வளாக தூய்மை, ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு, நிலையான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பறக்கும்படை மற்றும் நிலையான பறக்கும் படை முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு தேர்வு மையங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆய்வின்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி, பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் உடனிருந்தனர்.