பள்ளி மேலாண்மைக்குழு குறித்து 210 இடங்களில் வாகன பிரசாரம் கலெக்டர் விசாகன் தொடங்கி வைத்தார்
பள்ளி மேலாண்மைக்குழு குறித்து 210 இடங்களில் வாகன பிரசார பயணத்தை கலெக்டர் விசாகன் தொடங்கி வைத்தார்.;
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு செய்யப்படுகிறது. இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வாகனங்களில் வீடியோ பிரசாரம் செய்யப்பட உள்ளது. இந்த வாகனங்களில் பிரசார பயணத்தை, திண்டுக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் விசாகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் கலெக்டர் கூறுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் முதல்கட்டமாக 200 அரசு நடுநிலைப்பள்ளிகளிலும், 2-வது கட்டமாக 476 அரசு தொடக்கப்பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு நடைபெற்றது. 3-வது கட்டமாக நாளை மறுநாள்(சனிக்கிழமை) 475 அரசு தொடக்கப்பள்ளிகளிலும், 170 அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஜூன் மாதத்திலும் மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு பணி நடக்கிறது.
இதுபற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த 7 பிரசார வாகனங்கள் 210 இடங்களில் பிரசாரம் செய்ய இருக்கின்றன. அப்போது பள்ளிக்கல்வித்துறை தொடர்பான விழிப்புணர்வு படக்காட்சிகள், பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கான விழிப்புணர்வு படக்காட்சிகள் திரையிட்டு காண்பிக்கப்படும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் கருப்புசாமி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருப்பதி மற்றும் ஆசிரிய பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர்.