குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி திரு பட்டினத்தில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்
திரு-பட்டினத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்கால்
திரு-பட்டினத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிநீர் பிரச்சினை
காரைக்காலை அடுத்த திரு-பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட போலகம் புதுக்காலனி, நைனிக்கட்டளை, காளியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியியுடன் இணைந்து ஊர்வலமாக சென்று கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதற்காக போலகம் ஆர்ச் பகுதியில் பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஒன்று கூடினர்.
பேச்சுவார்த்தை
ஆனால் ஊர்வலம் புறப்பட்ட சிறிது தூரத்திலேயே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அந்த இடத்திலேயே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு திரு-பட்டினம் கிளை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். விவசாய சங்க மாவட்டத் தலைவர் பழனிவேலு முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் தமீம் அன்சாரி, மாநில செயற்குழு உறுப்பினர் வின்சென்ட், தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் நிலவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் இளமுருகன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 15 நாட்களுக்குள் குடிநீர் பிரச்சினையை தீர்வு காண்பதாகவும், அதுவரை லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.