நீலகிரி மாவட்டத்தில் கண்ணாடி பாட்டிலில் தண்ணீர் விற்பனை தொடக்கம்

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக்குக்கு பதிலாக கண்ணாடி பாட்டிலில் தண்ணீர் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.;

Update: 2022-05-05 14:13 GMT
கூடலூர்

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக்குக்கு பதிலாக கண்ணாடி பாட்டிலில் தண்ணீர் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை

நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பிரதேசமாக உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகின்றனர். இவ்வாறு வருபவர்கள் பிளாஸ்டிக் கழிவுகளை திறந்தவெளியில் வீசி சென்றனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயமும், வனவிலங்குகள் பிளாஸ்டிக் கழிவுகளை உண்பதால் உடல்நிலை பாதிக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கும், பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டது. இதனிடையே பிளாஸ்டிக் மற்றும் காலி மது பாட்டில்களை திறந்தவெளி பகுதியில் தூக்கி எறியாமல் இருக்க மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் சேகரிப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளது.

கண்ணாடி பாட்டிலில் தண்ணீர் விற்பனை

இந்த நிலையில் பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்வதற்கு பதிலாக கண்ணாடி பாட்டில்களில் குடிநீர் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் முழுவதும் கடைகளில் கண்ணாடி பாட்டில்களில் தண்ணீர் விற்பனை பரவலாக நடைபெற்று வருகிறது. ஒரு பாட்டில் விலை ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து காலி கண்ணாடி பாட்டிலை கடையில் திருப்பி வழங்கினால் ரூ.30 வரை தள்ளுபடி செய்யப்பட்டு விற்கப்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
ஊட்டி, குன்னூர் பகுதியில் கண்ணாடி பாட்டிலில் தண்ணீர் விற்பனை நடைபெற்று வருகிறது. பெரும்பாலான சுற்றுலா பயணிகள் தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால் அவர்கள் கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்தி விட்டு மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அதிகமாக வீசிச் செல்கின்றனர். 

வனம் மற்றும் விவசாய நிலத்தில் தூக்கி எறிவதால் உடைந்து காணப்படுகிறது. எனவே கண்ணாடி பாட்டில்களை பொது இடத்தில் தூக்கி வீசுவதை தடுக்க சுற்றுலா பயணிகளிடம் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்