நன்னடத்தை பிணையை மீறிய சரித்திரப்பதிவேடு குற்றவாளிக்கு 302 நாட்கள் சிறை - வருவாய் ஆர்.டி.ஓ. உத்தரவு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் அறிவுறுத்தினார்.
இதன்படி பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிந்துரையின்பேரில், பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட சரித்திரப்பதிவேடு குற்றவாளியான காஞ்சீபுரம் மாவட்டம், ஊவேரிசத்திரம் கிராமம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மதிவாணன் (வயது 25) என்பவரை ஒரு ஆண்டிற்கு நன்னடத்தை பிணையில் இருக்கும்படி காஞ்சீபுரம் வருவாய் ஆர்.டி.ஓ. ஆணை பிறப்பித்தார்.
இந்த நிலையில் மேற்படி, மதிவாணன் நன்னடத்தை பிணையை மீறி காஞ்சீபுரம் ரங்கசாமி குளம் அருகே இரும்பு கடை வைத்து தொழில் வியாபாரி முருகன் என்பவரிடம் பணம் கேட்டு மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டது சம்பந்தமாக விஷ்ணுகாஞ்சி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.
எனவே, மதிவாணன் நன்னடத்தை பிணையை மீறிய குற்றத்திற்காக 302 நாட்கள் சிறையில் அடைக்க காஞ்சீபுரம் வருவாய் ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார்.