அதிக ஒலி எழுப்பும் ‘ஏர்-ஹாரன்' கொண்ட வாகனங்களுக்கு அபராதம்
அதிக ஒலி எழுப்பும் ‘ஏர்-ஹாரன்' கொண்ட வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வட்டார போக்குவரத்து அதிகாரி தெரிவித்தனர்.
தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் அரசு, தனியார் பஸ்கள் மற்றும் லாரிகள் அதிக ஒலி எழுப்பும் ஏர்-ஹாரன்களை பயன்படுத்துவதால் சாலையோரம் அமைந்துள்ள ஆஸ்பத்திரி, அரசு அலுவலகங்களில் பணியாற்றுபவர்களுக்கு மிகவும் இடையூறு ஏற்படுகிறது. மேலும், சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மற்றும் சாலையோரம் நடந்து செல்பவர்கள் ஹாரன் சத்தத்தினால் அதிர்ச்சியில் சாலை விபத்துகளில் சிக்கி மரணமடைந்து வருகிறார்கள்.
அதனடிப்படையில் செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே வட்டார போக்குவரத்து அலுவலர் திருவள்ளுவன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஹமீதாபானு, ஆனந்தன் மற்றும் முரளி ஆகியோர் கொண்ட குழு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அதில் அதிக பாரம் ஏற்றிச்சென்ற வாகனங்கள் மற்றும் ஏர்-ஹாரன் பயன்படுத்திய வாகனங்கள் என 10-க்கும் மேற்பட்ட வாகனங்களை மடக்கி பிடித்து நேற்று மட்டும் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்று பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஏர்-ஹாரன் பொருத்தி இயக்கப்படும் கனரக வாகன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.